சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை குறைப்பதற்கான சூழலை மேம்படுத்த சன் டி.வி. 2 கோடியே 67 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்டங்களுக்காக சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக சன் டி.வி. 2 கோடியே 67 லட்சத்து 10 ஆயிரத்து 678 ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதற்கான காசோலையை, க்ரை தொண்டு அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பூஜா மர்வாஹாவிடம் சன் டி.வி. சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்வின் போது, க்ரை தொண்டு அமைப்பின் தென்னிந்திய மண்டல இயக்குநர் ஜான் ராபர்ட்ஸ், இணை பொது மேலாளர் ஹரி ஜெயகரன், முதுநிலை மேலாளர் முகமது யாசின் ஆகியோர் உடனிருந்தனர்.
சன் டி.வி. அளித்த நிதி உதவியின் மூலம், சேலம் மாவட்டத்தில் உள்ள 3 அரசு உயர்நிலை பள்ளிகள் முழுமையாக புனரமைக்கப்பட்டு, முன்மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும் என க்ரை அமைப்பின் தலைமை செயல் அதிகாரி பூஜா மர்வாஹா தெரிவித்தார்.மாணவர்களின் இடைநிற்றலை குறைப்பது மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம் என்ற க்ரை அமைப்பினர், இந்த நிதியின் மூலம் அரசு பள்ளிகளில் அதற்கேற்ற கற்றல் சூழல் உருவாக்கி தரப்படும் என தெரிவித்தனர்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தவும், கற்றலுக்கான சூழலை மேம்படுத்தவும் க்ரை தொண்டு அமைப்புக்கு கடந்த 4 ஆண்டுகளில் 15 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதி உதவியை சன் டி.வி. அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.