Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இறுதிக்கட்டத்தில் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

நியூயார்க்: “இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்தியா மீதான வரிகள் குறைக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் 2ம் முறையாக பதவி ஏற்ற டொனால்ட் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது கடும் வரிகளை விதித்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரியையும், ரஷ்யாவிடம் இருந்து கச்ச எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக கூடுதலா 25 சதவீத வரியையும் டிரம்ப் விதித்துள்ளார்.

இந்த 50 சதவீத வரியால் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் இந்தியா அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  இந்நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் பற்றி அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் ஓவல் அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்று கொண்டார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “பிரதமர் மோடியுடன் அமெரிக்கா ஒரு அற்புதமான உறவை கொண்டுள்ளது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா ஒரு முக்கியமான பொருளதார மற்றும் மூலோபாய பாதுகாப்பு கூட்டாளி. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரை கொண்டுள்ளது. ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் செய்த இந்தியா மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டன.

தற்போது அவர்கள் ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதை நிறுத்தி விட்டனர். அது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இது கடந்த காலத்தில் இருந்ததை விட வித்தியாசமான வர்த்தக ஒப்பந்தம். அதிக வரிகள் காரணமாக எங்களை நேசிக்காத இந்தியா இனி எங்களை நேசிக்கும். இதேபோல் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை குறைத்துள்ள இந்தியா மீதான வரி விதிப்புகள் குறைக்கப்படும்” என தெரிவித்தார்.

* செர்ஜியோ கோருக்கு டிரம்ப் வாழ்த்து

முன்னதாக இந்தியாவுக்கான தூதராக பதவியேற்ற செர்ஜியோ கோருக்கு கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்த டிரம்ப், “உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியாவின் தூதராக பதவி ஏற்றுள்ள செர்ஜியோ கோர், அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த பிரதிநிதியாக இருப்பார் என நம்புகிறேன். அவர் நம் நாட்டையும், அவரது நண்பர்களையும் பெருமைப்படுத்துவார். அவரை நான் நீண்டகாலமாக அறிவேன். கோர் ஒரு சிறந்த மனிதர்” என புகழாரம் சூட்டினார்.