Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாடே எங்கள் பின்னால் இருக்கிறது; இறுதிபோட்டியிலும் சிறப்பாக ஆடுவோம்: கேப்டன் ஹர்மன்பிரீத் நம்பிக்கை

மும்பை: 13வது ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நவிமும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 49.5ஓவரில் 338 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட்119 , எல்லிஸ் பெர்ரி 77, ஆஷ்லீ கார்ட்னர் 63 ரன் அடித்தனர். பின்னர் 339 ரன் என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா 10, ஸ்மிருதி மந்தனா 24 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்,கேப்டன் ஹர்மன்பிரீத் 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 167 ரன் சேர்த்தனர். ஹர்மன்பிரீத் 88 பந்தில் 10 பவுண்டரி, 2சிக்சருடன் 89 ரன்னில் அவுட்டாக மறுபுறம் 3 கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஜெமிமா 3வது சதத்தை விளாசினார். இக்கட்டான நேரத்தில் தீப்தி சர்மா 24, ரிச்சா கோஷ் 26 ரன் அடித்தனர். 48.3ஓவரில் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 341 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஜெமிமா 127, அமன்ஜோத் கவுர் 15 ரன்னில் நாட் அவுட்டாக களத்தில் இருந்தனர். ஜெமிமா ஆட்டநாயகி விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 3வதுமுறையாக பைனலுக்குள் இந்தியா நுழைந்தது.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கூறியதாவது: மிகவும் பெருமையாக உணர்கிறேன். மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. ஆஸ்திரேலியா என்ற ஒரு மிகப்பெரிய அணியை வீழ்த்தி இருக்கிறோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். எந்த சூழலாக இருந்தாலும் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அணிக்காக எப்போதுமே வெற்றியை தேடி தர வேண்டும் என்பதில் ஜெமிமா தெளிவாக இருந்தார். இந்த வெற்றிக்கு அவருக்கு தான் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும். இன்னும் ஒரு போட்டி எஞ்சியிருக்கிறது. அடுத்த போட்டி மிகவும் முக்கியமானது. அதில் வெற்றி பெற வேண்டும் முழு கவனத்துடன் இருப்போம். சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் ஆடுவது மிகவும் ஸ்பெஷல். நிச்சயமாக இறுதிப்போட்டியிலும் பெஸ்ட்டை கொடுப்போம். நாங்கள் தனியாக இல்லை ஒட்டுமொத்த மக்களும் எங்களுக்கு பின்னால் இருக்கிறார்கள்,என்றார்.

கடவுளுக்கு நன்றி: ஜெமிமா நெகிழ்ச்சி

ஆட்ட நாயகி விருது வென்ற ஜெமிமா கூறியதாவது: ”முதலில் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இது என்னால் மட்டும் சாத்தியமாகவில்லை. என் பெற்றோர், பயிற்சியாளர் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி. கடந்த ஒரு மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. இது இன்னும் ஒரு கனவு போலவே இருக்கிறது. என்னால் நம்பவே முடியவில்லை. 3வது இடத்தில் பேட் செய்யப் போகிறேன் என்பதே எனக்குத் தெரியாது. நான் குளித்துக் கொண்டிருந்தேன். களமிறங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்தான் என்னிடம் தெரிவித்தனர். கடந்த உலகக் கோப்பையில் நீக்கப்பட்டேன். இந்ததொடர் முழுவதும் நான் கிட்டத்தட்ட தினமும் அழுதுள்ளேன். மனரீதியாகப் போராடினேன், மிகுந்த பதற்றத்தில் இருந்தேன். ஆனால், கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டார். ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், ஒரு வசனத்தை எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ‘அமைதியாக நில், கடவுள் உனக்காகப் போராடுவார்’ என்று. நான் அமைதியாக நின்றேன். எனக்கு கிடைத்த பாராட்டுக்கள் எதையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் தனியாக எதையும் செய்யவில்லை. ரசிகர்களின் ஆதரவு எனக்குள் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது” என்றார்.

ஆஸி. கேப்டன் பாராட்டு: ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி கூறியதாவது: போட்டி மிகவும் அற்புதமாக இருந்தது. தோல்விக்கு காரணம் நாங்கள் பேட்டிங்கை சிறப்பாக முடிக்கவில்லை. பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. சில கேட்ச்களையும் தவறவிட்டோம். இந்த இலக்கை நிர்ணயித்த போது பாதி வேலை முடிந்து விட்டது என நினைத்தேன். கூடுதலாக சில ரன்ளை அடித்திருக்க வேண்டும். இந்தியா சிறப்பாக செயல்பட்டது. நெருக்கடியான சமயத்தில் அபாரமாக பேட்டிங் செய்து வெற்றியை தாண்டி விட்டார்கள். கண்டிப்பாக அடுத்த உலகக் கோப்பையில் நான்ஆட மாட்டேன். அடுத்த 4 ஆண்டுகளில் அணியில் பல மாற்றங்கள் நிச்சயம் நிகழும், என்றார்.

அணிக்கு வாழ்த்து மழை

டெண்டுல்கர்: ”அற்புதமான வெற்றி. முன்னின்று வழி நடத்திய ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத், சிறப்பாகச் செய்தீர்கள். மூவர்ணக் கொடியைத் தொடர்ந்து உயரப் பறக்க விடுங்கள்” என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.

ரோஹித் சர்மா: ”சிறப்பாகச் செய்தீர்கள், இந்திய அணி,”

சேவாக்: ”ஆஸ்திரேலியா எளிதாக வென்று பைனலுக்கு சென்றுவிடலாம் என்று நினைத்திருக்கும். ஆனால், நம்முடைய வீராங்கனைகளோ, உண்மையான பட்டாசுகளை வெடிக்க இதுதான் சரியான வாய்ப்பு என்று நினைத்துவிட்டார்கள். விமர்சனங்கள் அனைத்தையும் ஒரே ஆட்டத்தில் அடித்து நொறுக்கிவிட்டனர். நமது நீலப்படை வீராங்கனைகளை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.”.

கங்குலி: மகளிரின் நம்பமுடியாத ஆட்டம். கடந்த 5 ஆண்டுகளில் சிறந்த அணியாக மாறிவிட்டார்கள்.. இன்னும் ஒன்று(பைனல்) இருக்கிறது.

கம்பீர்: இது இத்துடன் முடிவதில்லை..என்ன ஒரு ஆட்டம்!.

யுவராஜ் சிங்: ஸ்கோர்போர்டில் எண்களைத் தாண்டிய வெற்றிகள் உள்ளன. இது அவற்றில் ஒன்று. அழுத்தத்தின் கீழ், கேப்டன் ஹர்மன், ஜெமிமாஆட்டம் அருமையாக இருந்தது.