Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

படத்தில் நடிக்க வாங்கிய முன்பணம் ரூ.6 கோடியை திருப்பி தரக்கோரி வழக்கு: நடிகர் ஜெயம் ரவி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலசந்திரன் தாக்கல் செய்த மனுவில், தங்களது நிறுவனத்தின் சார்பில் இரண்டு படங்களில் நடிப்பதற்காக நடிகர் ரவி மோகனுடன் (ஜெயம் ரவி) கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் படத்திற்கு ஊதியமாக பதினைந்து கோடி ரூபாய் பேசப்பட்டு ஆறு கோடி ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டது.

ஒப்பந்தப்படி தங்களது நிறுவனத்தின் படத்தில் நடிக்காமல் மற்ற நிறுவன படங்களில் நடித்த போது முன் பணத்தை திருப்பி கேட்டபோது ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் முன் பணத்தை திருப்பி அளிப்பதாகவும் ஜெயம் ரவி கூறினார். ஆனால், பணத்தை திரும்ப கொடுக்காமல் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் ப்ரோ கோட் என்ற படத்தை தயாரிக்க உள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், தங்களது நிறுவனம் அளித்த முன் பணத்தை ரவி மோகன் தனது சொந்த படத் தயாரிப்புக்கோ அல்லது சொந்த செலவுகளுக்கோ பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, ப்ரோ கோட் படத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும். வேறு நிறுவனங்களின் தயாரிப்பிலும் நடிக்க ஜெயம் ரவி என்ற ரவி மோகனுக்கு தடை விதிக்க வேண்டும். ரூ.6 கோடி உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரூ.6 கோடி பெற்றுக்கொண்டது உண்மை தான். ஆனால், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை தொடங்காததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடாக கூடுதலாக ரூ.10 கோடியை பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்க வேண்டுமென வாதிட்டார். இதனையடுத்து, மனு குறித்து நடிகர் ரவி மோகன் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.