ஏ.ஐ. நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் போர் விமானம்: அமெரிக்காவின் "ஷீல்டு ஏ.ஐ." நிறுவனம் வடிவமைப்பு!
வாஷிங்டன்: விமானிகள் இல்லாமல் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்க கூடிய போர் விமானத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். உலகில் உள்ள எந்தவகை போர் விமானமாக இருந்தாலும் அது உயர பறக்க வேண்டும் என்றால் விமானியும், ஓடுதளமும் அவசியமாகும். ஆனால், ஓடுதளமும், விமானியும் அவசியம் இல்லாத வகையில் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய நவீன விமானத்தை அமெரிக்காவின் ஷீல்டு ஏ.ஐ. நிறுவனம் வடிவமைத்துள்ளது. X-BAT என பெயரிடப்பட்டுள்ள இந்த தானியங்கி போர் விமானம் நிலத்தில் இருந்து நேரடியாக விண்ணில் பாயும் ஆற்றல் கொண்டது.
X-BAT 4 விமானம் 26 அடி நீளம் கொண்டது. அதன் இறக்கைகளின் அகலம் 39 அடி. இது அதிகபட்சம் 50 அடி உயரத்திலும், 3,700 கிலோ மீட்டர் தூரம் தொடர்ச்சியாகவும் பறக்கும் திறன் உடையது. விமானத்தில் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்களை பொருத்த முடியும். X-BAT AI போர் விமானம் மூலம் எதிர் விமானங்களையும், தரையில் உள்ள இலக்குகளையும் தாக்க முடியும். உலகின் முதல் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் போர் விமானத்தை இறுதி கட்ட சோதனை செய்து வரும் ஷீல்டு ஏ.ஐ. நிறுவனம், இதனை 2028 முதல் முழு வீச்சில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
 
  
  
  
   
