படுமி: ஜார்ஜியாவின் படுமி நகரில் 3வது ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வந்தன. இப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி (38), திவ்யா தேஷ்முக் (19) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். கடந்த 26ம் தேதி இவர்கள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த 2வது ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதையடுத்து, நேற்று, ஹம்பி - திவ்யா இடையே டைபிரேக்கர் போட்டியாக, முதல் ரேபிட் போட்டி நடந்தது. திவ்யா வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தை துவக்கினார். போட்டியின் கடைசி கட்டத்தில் திவ்யா தொடர்ச்சியாக செக் வைத்து ஆட, ஹம்பி, லாவகமாக அதில் இருந்து மீண்டு வந்தார்.
கடைசியில் முதல் ரேபிட் போட்டி டிராவில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் 2வது ரேபிட் போட்டி துவங்கியது. அதில், ஹம்பி வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். தடுமாற்றத்துடன் ஆடிய ஹம்பியை விட, திவ்யாவுக்கு நேர அனுகூலம் அதிகமாக இருந்தது. இருப்பினும், ஒரு கட்டத்தில் இந்த போட்டியும் டிரா ஆகும் சூழல் காணப்பட்டது. ஆனால், ஹம்பி தவறுதலாக காயை நகர்த்த அந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் திவ்யா பயன்படுத்தினார். அதனால் வேறு வழியின்றி தோல்வியை ஒப்புக் கொண்ட ஹம்பி, திவ்யாவுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து, 3வது ஃபிடே மகளிர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று திவ்யா அசத்தியுள்ளார்.