Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் தெரிவித்த சேலம் அரசு மருத்துவமனை டாக்டர், புரோக்கர் கைது

சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த கும்பலை, சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சமீபத்தில் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், சேலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவது தெரியவந்தது.

குறிப்பாக, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், பணத்தை பெற்றுக் கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, நேற்று சுகாதாரத்துறையினர் தரப்பில் கர்ப்பிணி பெண் ஒருவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டு, ரேடியாலஜி மருத்துவர் ஒருவர், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்தார்.

இதனையடுத்து அவரை மடக்கி பிடித்த சுகாதாரத்துறையினர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குடும்ப நலப்பணிகள் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர், இணை இயக்குநர் நந்தினி மற்றும் ஆத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குநர் யோகானந்த் ஆகியோர் சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மருத்துவர் தியாகராஜன் (58) என்பதும், சேலம் அரசு மருத்துவமனையின் ரேடியாலஜி துறையில் பணிபுரிந்து கொண்டு, அங்கு ஸ்கேன் செய்ய வரும் பெண்களிடம் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்து வந்ததும் தெரியவந்தது. மேலும், சேலம் காந்தி ரோட்டில் உள்ள தனியார் ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வரும், அம்மாபேட்டை அடுத்த வாய்க்கால்பட்டறையைச் சேர்ந்த ஸ்ரீராம் (37) என்பவர், இதற்கு உடந்தையாக இருந்து புரோக்கராக செயல்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இணை இயக்குநர் நந்தினி, சேலம் அரசு மருத்துவமனையின் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அரசு மருத்துவமனை டாக்டர் தியாகராஜன் மற்றும் புரோக்கர் ஸ்ரீராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.