திருக்கோயில்களின் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (13.11.2025) சென்னை, தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தரும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மேல்மலையனூர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம், அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில், மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 13 திருக்கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நாட்களின் போது மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகள் குறித்து சம்மந்தப்பட்ட மண்டல இணை ஆணையர்கள் மற்றும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் திருக்கோயில்களின் உட்புறத்திலும், சுற்றுப்புறத்திலும் பக்தர்கள் எவ்வித நெரிசலும் இல்லாமல் தரிசனம் செய்திட மேற்கொள்ளப்பட ஏற்பாடுகள் குறித்து விவரித்து, அறிவுரைகளை வழங்கினர். நிறைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் இலகுவாகவும், விரைவாகவும் தரிசனம் செய்திடும் வகையிலும் கூட்ட மேலாண்மைக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து தந்திட வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இதனை செயல்படுத்திடும் வகையில் ஏற்கனவே நாம் கடைபிடித்து வரும் நடைமுறைகளோடு, துறையின் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்த கருத்துகளை இணைத்து செயல்திட்டத்தினை வகுத்திட வேண்டும். இது தொடர்பாக மண்டல இணை ஆணையர்கள் மற்றும் திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள் அந்தந்த மாவட்ட காவல்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைத்து வகையிலும் மனநிறைவடையும் வகையில் பணியாற்றிட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன், இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் முனைவர் துரை. இரவிச்சந்திரன், இ.ஆ.ப., கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப., வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், இ.கா.ப., காவல்துறை தலைவர் (பொது) பிரவின்குமார் அபிநபு, இ.கா.ப., இந்து சமய அறநிலையத்துறை தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி, கூடுதல் ஆணையர்கள், மண்டல இணை ஆணையர்கள், முதுநிலை திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
