Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உரங்களை பதுக்கி வைத்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

சென்னை: உரங்களை பதுக்கி வைத்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேஆர். பெரியகருப்பன் தலைமையில் "தமிழ்நாட்டில் சம்பா பருவத்திற்கு தேவையான உரம் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது" குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடன் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சரின் உத்தரவின்படி, வேளாண்மை உற்பத்தியினை அதிகரித்திடவும். விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்திடவும் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சிறப்புத்தொகுப்புத்திட்டம் செயல்படுத்தியது போன்றே நடப்பு ஆண்டிலும் "குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம்" 82 கோடியே 77 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதுடன். தமிழ்நாட்டில் முதன்முறையாக கார்/குறுவை/சொர்ணவாரி பருவத்திற்கான "சிறப்புத் தொகுப்புத் திட்டம்" 132 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரால் மேட்டூர் அணை, குறுவை சாகுபடிக்காக குறித்த தேதியான ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டு தொடர்ச்சியாக பாசனநீர் வழங்கப்படுவதன் காரணமாகவும்,

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட சாதகமான மழைப்பொழிவின் காரணமாகவும் கார்/குறுவை/சொர்ணவாரி பருவத்தில் தற்போதுவரை, 17 இலட்சத்து 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அறுவடைப்பணிகள் நடைபெற்று வருவதுடன், நெல் கொள்முதலும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது, சம்பா/தாளடி/பிசானம் பருவ நெல் சாகுபடி மேற்கொள்வதற்கான பணிகள் தீவிரமடைந்துவரும் நிலையில், விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தடையின்றிக் கிடைத்திட தேவையான உரங்களை இருப்பு வைத்தல் மற்றும் சீரான விநியோகம் செய்தல் குறித்து அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேஆர். பெரியகருப்பன் இணைந்து இன்று தலைமைச்செயலகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் உர உற்பத்தி நிறுவனங்களுடன் விரிவான ஆய்வுக்கூட்டம் நடத்தினர்.

நடப்பு ஆண்டு குறுவை (காரீப் பருவத்தில் ஒன்றிய அரசு வழங்கவேண்டிய யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களில் மீதமுள்ள ஒரு இலட்சத்து 55 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்களை உடனடியாக வழங்கிட வேண்டியும், சம்பா பருவத்திற்கு கூடுதலாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்களை வழங்கிட வேண்டியும் முதலமைச்சர் பிரதமரிடம் கடிதம் வாயிலாக வலியுறுத்தினார். அதன் அடிப்படையில், தற்போது 12 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா மட்டுமே கூடுதலாக வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள உரங்களையும் ஒன்றிய அரசு உடனடியாக வழங்க மேலும் வலியுறுத்தப்படும்.

அக்டோபர்,2025 மாத உர விநியோகத் திட்டத்தின்படி உரங்களைப் பெற்று இருப்பு வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் மாவட்ட வாரியாக தேவைக்கு ஏற்ப யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களையும் எவ்விதக் குறைவுமின்றி முறையாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், உர உற்பத்தி நிறுவனங்கள் மாதாந்திர உர விநியோகத் திட்டத்தின்படி தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய உரங்களை உரிய நேரத்தில் வழங்கவேண்டும் என்றும், கூட்டுறவு உரநிறுவனங்களான இஃப்கோ, கிரிப்கோ ஆகியவை மாதாந்திர ஒதுக்கீட்டில் 80 சதவீதத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 20 சதவீதத்தை தனியார் விற்பனை நிலையங்களுக்கும் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. தனியார் உரநிறுவனங்கள் 40 சதவீத உரஒதுக்கீட்டினை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும், 60 சதவீதத்தை தனியார் விற்பனை நிலையங்களுக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டது. தூத்துக்குடியிலுள்ள ஸ்பிக் உர நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளதால், உர விநியோகத்தில் அந்நிறுவனம் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

உர விற்பனை நிலையங்களில், விற்பனை முனையக் கருவி (Point of Sale) வாயிலாக மட்டுமே உரங்களை விற்பனை செய்யவேண்டும் என்றும், முறையாக விவசாயிகளுக்கு இரசீது வழங்கிட வேண்டும் என்றும். விற்பனை முனையக் கருவி இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், உரத் தேவை உள்ள விற்பனை நிலையங்களுக்கு / கூட்டுறவு சங்கக் கிளைகளுக்கு கூடுதலாக இருப்பு உள்ள இடங்களிலிருந்து தேவையான இடங்களுக்கு மாவட்டத்திற்குள்ளேயே உரங்களை மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இது தவிர, உரத்தேவையினை நிறைவு செய்யும் வகையில் மாவட்டத்திலுள்ள இருப்பை விடக் கூடுதலாக உரங்கள் தேவையிருப்பின் மாவட்டத்திற்கு வெளியிலுள்ள விற்பனை நிலையங்கள் / இருப்பு மையங்களில் தேவைக்கு அதிகமாக உள்ள உரங்களை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சிறப்புக் கண்காணிப்புக் குழுக்களை (Special Inspection Squads) அமைத்து உர விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை, வேளாண்மை தவிர இதர பயன்பாட்டிற்கு வழங்குதல், கலப்படம் மற்றும் போலி உரங்களை விற்பனை செய்தல், விதிமுறைகளை மீறி உரங்களைப் பதுக்கிவைத்தல் போன்றவை நிகழாமல் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளவும், மீறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. உரங்களை இருப்பு வைத்திருந்தும் 6 மாதங்களுக்கு மேல் விற்பனை செய்யாமல் இருக்கும் உர விற்பனை நிலையங்களைக் கண்டறிந்து அவற்றின் உரிமத்தை சட்ட விதிமுறைகளின்படி ரத்து செய்திட அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளர், சத்ய பிரதா சாகு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர், வ.தட்சிணாமூர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார் இயக்குநர் வேளாண்மைத்துறை பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல் பாண்டியன், மற்றும் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள், மாவட்ட அலுவலர்கள் மற்றும் உர நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.