திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பெண் ரவுடிகளை ஒரு வருடத்திற்கு ஊருக்குள் நுழைய திருச்சூர் போலீஸ் தடை விதித்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கரயாமுட்டம் பகுதியை சேர்ந்தவர் சுவாதி (28). அருகில் உள்ள வலப்பாடு என்ற பகுதியை சேர்ந்தவர் இயானி ஹிமா (25). பிரபல ரவுடிகளான இவர்கள் இருவர் மீதும் திருட்டு, அடிதடி உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளன. தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 2 பேர் மீதும் திருச்சூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன்படி வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், 6 மாதத்திற்கு தினமும் கொடுங்கல்லூர் டிஎஸ்பி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுவாதியும், இயானி ஹிமாவும் தினமும் கையெழுத்து போட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் திருச்சூரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுவாதியையும், இயானி ஹிமாவையும் ஒரு வருடத்திற்கு திருச்சூர் ஊருக்குள் நுழைய தடை விதித்து திருச்சூர் சரக டிஐஜி ஹரிசங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.