அண்ணாநகர்: டி.பி.சத்திரம் குடியிருப்பில் வசித்துவந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தவர் கார்த்திகா ராணி (30). டி.பி. சத்திரம் காவலர் குடியிருப்பில் 2 குழந்தைகளுடன் வசித்துவந்த இவர், தினமும் அதிகாலையில் எழுந்து தனது பணிகளை துவங்கிவிடுவார் என்று தெரிகிறது. இந்தநிலையில், இன்று காலை அவர் வெளியே வரவில்லை என்றதும் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் அவரது வீட்டின் கதவை தட்டியபோது உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பலமுறை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது கார்த்திகா ராணி தூக்கில் தொங்குவது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி டி.பி. சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து கார்த்திகா ராணி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ‘’கார்த்திகா ராணி கடந்த ஒரு வருடத்துக்கு முன் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்துள்ளார்’ என்று தெரியவந்துள்ளது.‘’கணவரை பிரிந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்தாரா வேறு ஏதாவது பிரச்னை காரணமா என்று போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தால் காவலர் குடியிருப்பில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.



