Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தற்கொலை செய்து கொண்ட பெண் மருத்துவர்; போலி பிரேத பரிசோதனை அறிக்கை தயாரித்து கொடுத்தவர்: பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணின் தாய் பகீர் குற்றச்சாட்டு

சதாரா: மகாராஷ்டிராவில் தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர், ‘எனது மகளின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை போலியாக தயாரித்து கொடுத்தவர்’ என பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில காவல் உதவி ஆய்வாளர் கோபால் படானே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மென்பொறியாளர் பிரசாந்த் பாங்கர் மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தனது உள்ளங்கையில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, இளம் பெண் மருத்துவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தற்கொலை கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர்கள், குற்றவாளி ஒருவருக்கு மருத்துவ ரீதியாக தகுதியானவர் என சான்றிதழ் அளிக்கச் சொல்லி தன்னை வற்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மென்பொறியாளர் பிரசாந்த் பாங்கர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கோபால் படானே ஆகியோர் கைது செய்யப்பட்டு, படானே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அதே பெண் மருத்துவர், ‘எனது மகளின் சந்தேக மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை போலியாக தயாரித்து வழங்கினார்’ என சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த பாக்ய மாருதி பச்சங்னே என்ற பெண் தற்போது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து பாக்ய பச்சங்னே கண்ணீருடன் கூறியதாவது: எனது மகள் தீபாலி, ராணுவ அதிகாரியான அஜிங்க்யா ஹன்மந்த் நிம்பால்கரை திருமணம் செய்திருந்தார். திருமணமான நாள் முதல் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் அவர் தொடர்ந்து மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால், என் மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன். தீபாலி இறந்த ஐந்து நாட்களுக்குப் பிறகும், காவல்துறை பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கவில்லை. ஒரு மாதத்திற்குப் பிறகு நாங்கள் அந்த அறிக்கையை பெற்றபோது, அது முற்றிலும் திரிக்கப்பட்டு போலியாக உருவாக்கப்பட்டிருந்தது.

எனது மருமகன் அஜிங்க்யா நிம்பால்கர், தனது அரசியல் மற்றும் காவல்துறை தொடர்புகளைப் பயன்படுத்தி இந்த வழக்கை மறைக்க முயற்சிக்கிறார். ஆறு மாத கர்ப்பிணியாகவும், ஒன்றரை வயது பெண் குழந்தையின் தாயாகவும் இருந்த என் மகள், ஒருபோதும் தற்கொலை செய்திருக்க மாட்டார். அவர் நிச்சயம் கொலை செய்யப்பட்டிருக்கிறார்’ என்று அவர் கூறினார். இந்த புதிய குற்றச்சாட்டு, பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் மேலும் ஒரு புதிய கோணத்திலான விசாரணையை சேர்த்துள்ளதுடன், பெரும் அரசியல் புயலையும் கிளப்பியுள்ளது.