திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரடிவாவி, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (33). தொழிலாளி. இவருடைய மாமனார் செல்வராஜ் பெயரில் வடுகபாளையம் அடுத்த அறிவொளிபுதூரில் நிலம் உள்ளது. செல்வராஜ் பெயரை பட்டாவில் இணைக்க கிருஷ்ணசாமி பி.வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) முத்துலட்சுமியிடம் விண்ணப்பித்துள்ளார். அவர் பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.
முதலில் ரூ.10 ஆயிரத்தை முத்துலட்சுமிக்கு லஞ்சமாக கொடுத்துள்ளார். மேலும் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்கவே கிருஷ்ணசாமி திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தந்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஏஓ முத்துலட்சுமியின் (44) வீட்டிற்கு சென்று கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த போலீசார் விஏஓவை கைது செய்தனர்.

