நாகர்கோவில்: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (28). நாகர்கோவில் நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். இதே போல் விளவங்கோடு அடுத்த செருவலூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஷிதா டிப்னி (23). இவர் திண்டிவனத்தில் உள்ள சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். மேல்புறம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர்சாலை ஊராட்சி தமிழக வெற்றிக்கழகத்தின் இணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். பயிற்சிக்காக நாகர்கோவில் நீதிமன்றத்துக்கு வரும் போது விஜயகுமாருக்கு அறிமுகம் ஆனார். பின்னர் இருவரும் நண்பர்களாக பழகினர். கடந்த 12.7.2025 அன்று, விஜயகுமாருக்கு வீட்டிற்கு அர்ஷிதா சென்றார்.
பின்னார், அர்ஷிதா பாத்ரூம் சென்றுள்ளார். அந்த சமயத்தில் விஜயகுமார், வீட்டுக்கு வெளியே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். 10 நிமிடம் கழித்து அர்ஷிதா சென்று விட்டார். அதன் பின்னர் விஜயகுமார் தாயார் அறையில் இருந்த 11.25 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். விசாரணையில் அர்ஷிதா தான் நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அர்ஷிதா டிப்னியை போலீசார் கைது செய்தனர்.