Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அருமனை அருகே கடன் பிரச்னையால் பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

அருமனை: அருமனை அருகே கடன் பிரச்னையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அருமனை அருகே மாத்தூர்கோணத்தை அடுத்த வட்டவிளையை சேர்ந்தவர் விஜயகுமார் (48). பழைய இரும்பு பொருட்களை சேகரித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி விஜயகுமாரி (41). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பிளஸ் 2, 2வது மகன் 8ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 2வது மகன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அதனால் பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் கணவன், மனைவி பல்வேறு இடங்களில் ரூ.30 லட்சம் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது.

இதனால் உரிய நேரத்தில் கடனை திருப்பி கொடுக்க முடியாமல் 2 பேரும் அவதிப்பட்டு வந்து உள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்தவர்கள் வந்து பணத்தை செலுத்துமாறு கண்டிப்புடன் கூறினார்களாம். இதனால் விஜயகுமாரி மனவேதனையில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு வழக்கம்போல் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். விஜயகுமார், 2 மகன்கள் வீட்டின் ஹாலிலும், விஜயகுமாரி வீட்டில் உள்ள ஒரு அறையிலும் தூங்கினர். இதற்கிடையே மூத்த மகன் இன்று சுற்றுலா செல்வதாக இருந்தது. இதனால் அவன் அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் எழுந்துள்ளான். பின்னர் அவன் தாய் படுத்திருந்த அறைக்கு சென்றான். அங்கு விஜயகுமாரி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு கதறி துடித்தான்.

சத்தம் கேட்டு கணவன், 2வது மகன் ஓடி வந்து அவர்களும் கதறினர். சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் விஜயகுமாரி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.