லண்டன்: இங்கிலாந்தில் மருத்துவமனை பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்திய வம்சாவளி டாக்டருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் லங்காஷையரில் உள்ள பிளாக்பூல் விக்டோரியா மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர் டாக்டர் அமல் கிருஷ்ணா போஸ் (55). இந்திய வம்சாவளி. கடந்த 2017 முதல் 2022 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தன்னிடம் பணியாற்றிய 5 இளநிலை பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தனது உயர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சைக்கு தயாரானபோது நர்ஸிடம் உடல் ரீதியாக பாலியல் சேட்டை செய்தது தொடர்பான புகார்கள் குவிந்தன.
இந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், அமல் போஸ் மீதான 12 பாலியல் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதி, அமல் போஸின் நடத்தை பாலியல் நோக்கம் கொண்டதாகவும், திட்டமிட்டதாகவும் இருந்தது. இதனால், 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கூறினார். மேலும், அவரது பெயர் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இடம்பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.