மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு
சென்னை: மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரை 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்படுகிறது. சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தில் மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக கடந்த 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. சென்னையின் பொதுப் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் மெட்ரோவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். நெரிசலின்றி வந்து செல்ல முடிவதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயன்பாட்டில் உள்ளது. தற்போது அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சுமார் ரூ.63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
மெட்ரோ 2-வது கட்ட திட்டத்தில் சென்னையின் முக்கிய இடங்கள் அனைத்தும் இணைக்கும் வகையில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கு முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது