Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: பெருமழை அச்சத்தில் இருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 375 ஆண்டுகள் பழமையான சென்னையின் மனிதவளம், வேலைவாய்ப்பு, போக்குவரத்து வசதி, பெருகும் குடியிருப்புகள், விரியும் விஸ்தீரணம் என மாநிலத் தலைநகரத்துக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தது சென்னை மாநகரம். அதேசமயம் கட்டமைப்பு வசதிகள் மிகுந்த, மாநிலத் தலைநகரில் கடந்த சில ஆண்டுகளாகவே நவம்பர், டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை வாசிகள் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடன் கடக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. "கோடையில் தண்ணீர் பற்றாக்குறையும், மழைக்காலத்தில் வெள்ளமும் சென்னையில் வழக்கமாகிவிட்டது".

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பது தொலைநோக்கு பார்வையுடனான திட்டம். வெளியிலிருந்து சென்னை மாநகருக்குள் வருகின்ற வெள்ள நீராக இருந்தாலும், மழைநீராக இருந்தாலும் அந்தந்த பகுதிகளில் சேமிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதேபோல் உபரிநீர், கழிவுநீர் தேங்காமல் வெளியேற வடிகால் வசதிகளையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாததால் ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் தண்ணீர் பஞ்சமும், சில வாரங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையும் தொடர்கிறது.கடந்த ஆண்டுகளில் ஓரிரு நாள் மழையை கூட தாக்குப்பிடிக்க முடியாதளவுக்கு மாநகரம் மாநரகமாகிப்போனது.

சாலைகள், தெருக்கள், சுரங்கப் பாதைகள் மட்டுமல்லாது வீடுகளிலும் புகுந்தது வெள்ள நீர். வாகனங்கள் சென்ற சாலைகளில் படகுகள் மிதந்த காட்சி, வெள்ளத்தின் நடுவே சிக்கிய மக்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கவேண்டிய சூழல் இப்படியாக தலைநகரமே தண்ணீரில் தத்தளித்தது. இந்த நிலை இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தில் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக டிசம்பர் 11, 12 நாட்களில் அதிக கன மழை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருக்கக்கூடும் .

எனவே, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் உபரிநீர் மற்றும் மழைநீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக போர்க்கால அடிப்படையில் சிறிய அளவிலான மழைநீர், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரி பராமரிக்க வேண்டும். ஏரிகள், நீர்ப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பேரிடர் மேலாண்மைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வருவாய்த் துறை மற்றும் பெருமாநகராட்சி அமைப்புகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

வெள்ளம் கரைபுரண்டோடும் பகுதிகளை சீரமைத்து, குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதை தடுக்க வேண்டும். இவைகளைப் போலவே, தவிர்க்க முடியாமல் வெள்ளத்தால் சூழப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கான தேவைகளை எவ்வித குறைபாடுமின்றி செய்து தரவும், மழைக்கால நோய் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் மருத்துவ கட்டமைப்புகளை சீரமைத்து, தேவையான மருந்துகள் இருப்பும், சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தவும், மருத்துவ பணியாளர்கள் தயார்படுத்த வேண்டும்.

இதேபோல் சென்னையின் மழை வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். மழைநீர் வடிகால்களில் நெகிழிப் பைகளை, குப்பைகளை போடக்கூடாது. பேரிடர் காலங்களில் அரசோடு மக்களும் இணைந்து செயல்படும் கலாச்சாரத்தை உருவாக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். ஊர்க்காவல் படை போல பேரிடர் மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற தன்னார்வ தொண்டர் படையை உருவாக்க வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்களுக்கு பேரிடர் குறித்து பயிற்சி அளித்தும் மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து சென்னை மக்களை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.