நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னஅரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி அருள்ஜோதி(35). கூலி வேலை செய்து வந்தார். மாரிமுத்து, கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், அருள்ஜோதி 2 பெண் குழந்தைகளுடன், தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், மாரிமுத்துவின் தந்தையான சேட்டு(65), மருமகள் என்றும் பாராமல், அருள்ஜோதிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அருள்ஜோதி, தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். அவர்கள் மாரிமுத்துவை கண்டித்ததால், அவர் முள்ளுக்குறிச்சிக்கு சென்று விட்டார்.
பின்னர், அருள்ஜோதி, மகள்களுடன் சின்ன அரியாகவுண்டம்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நாமகிரிப்பேட்டைக்கு வந்த சேட்டு, அங்குள்ள இறைச்சி கடையில் வேலை செய்துவிட்டு, அன்று இரவு முள்ளுக்குறிச்சி சென்று விட்டார். நேற்று மதியம், மீண்டும் நாமகிரிப்பேட்டைக்கு வந்த சேட்டு, அருள்ஜோதி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த அருள்ஜோதியிடம் தன்னுடைய ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு அருள்ஜோதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சேட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அருள்ஜோதியின் வயிறு மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார். வலி தாங்க முடியாத அருள்ஜோதி கதறி துடித்துள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்தனர். இதை கண்டதும் சேட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அருள்ஜோதியை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அருள்ஜோதியை அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேட்டுவை தேடி வருகின்றனர்.