நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகள் நந்தினி (21). இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், தூரத்து உறவினரான ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய் (26) என்பவரும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அஜய், நந்தினி வீட்டுக்கு நேரில் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மறுத்து விட்டனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர்.
இதையடுத்து, நேற்று நந்தினி வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது, தொலை பேசியில் அஜய்யை தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லுமாறு தெரிவித்துள்ளார். இல்லையெனில், தனக்கு வேறு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என கூறியுள்ளார். உடனே, அஜய் ஒரு வாடகை காரில், உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு நந்தினி தெரிவித்தவாறு நேற்று மாலை நாமக்கல்-சேலம் சாலைக்கு விரைந்துள்ளார். வழக்கம்போல் கல்லூரி சென்று பஸ்சில் திரும்பும் நந்தினியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக அவரது தந்தையும் அங்கு காத்திருந்தார்.
பஸ்சிலிருந்து இறங்கிய நந்தினியை காரில் ஏற்றி அழைத்துச்செல்ல அஜய் முயன்றார். அதனைக்கண்டு தண்டபாணி திடுக்கிட்டார். உடனே, காரை வழிமறித்து கூச்சலிட்டார். இதுகுறித்த தகவலின்பேரில், அவரது உறவினர்களும் திரண்டு வந்தனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், காரில் அமர்ந்திருந்த காதல்ஜோடி செய்வதறியாமல் திகைத்தனர். நாம் பிரிந்து சென்று விட்டால், மீண்டும் ஒன்றுசேர முடியாது.
இனிமேல் கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். உன்னோடு பேசவும் முடியாது என நந்தினி கெஞ்சியுள்ளார். அதனை கேட்டு மனம் உருகிய அஜய் தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து காருக்குள்ளேயே வைத்து நந்தினி கழுத்தில் கட்டியுள்ளார். மேலும், தான் வைத்திருந்த மோதிரத்தை நந்தினிக்கு அணிவித்துள்ளார்.
இதைப்பார்த்த நந்தினியின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், காரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். தகவலின்பேரில், நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதல் ஜோடியை மீட்டு நாமக்கல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இருவரும் திருமண வயதை எட்டியவர்கள் என்பதால் காவல்துறையினர் சமரசம் செய்து வைத்தனர்.