தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மனைவி சக்திமகேஸ்வரி (38). 2 மகள்கள் உள்ளனர். ராமசுப்பு கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சக்தி மகேஸ்வரிக்கும், தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் ஏட்டு ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை ஏட்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்பை நிறுத்தவில்லை. இதனால் மனைவி பிரிந்து சென்றுள்ளார். மகள் மற்றும் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மகன் தந்தையுடன் வசித்துள்ளனர்.
அவர்களையும் கவனிக்காமல் ஏட்டு அடிக்கடி சக்தி மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுவிடுவாராம். தாய் பிரிந்து சென்றதற்கு சக்தி மகேஸ்வரிதான் காரணம் எனக்கருதிய, ஏட்டுவின் மகன், நேற்று மாலை நண்பனுடன் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று தனியாக இருந்த அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் 2 சிறுவர்களும் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிந்து சிறுவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.