தந்தையை தனயன் சிறுமைப்படுத்துவதா? அன்புமணியை தாக்கி முதல்முறையாக பாமக, வன்னியர் சங்கத்தினர் விளம்பரம்: அன்பில்லாதோரிடம் ‘மணி’ இருக்கிறது என விமர்சனம்
திண்டிவனம்: தந்தையை சிறுமைப்படுத்தும் தனயன், தமிழ்நாட்டை காப்பதா? தலைவனுக்கெல்லாம் தலைவனை தலைகுனிய வைப்பதா? என அன்புமணியை தாக்கி முதல்முறையாக பாமக, வன்னியர் சங்கம் சார்பில் விளம்பரம் வெளியிடுட்ள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வரும் 17ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு போட்டியாக அன்புமணி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டத்தை நேற்றுமுன்தினம் நடத்தினார்.
அவர் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், ராமதாசுக்காக ஒரு சேர் போட்டு, அதில் வெள்ளைத்துண்டு போட்டிருந்தனர். ஆனால், அவர் வரவில்லை. என்றாலும் நமது இதயங்களில் அவர் நிறைந்து உள்ளார் என செண்டிமெண்ட்டாக அன்புமணி பேசினார். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நேற்று நடந்த மகளிர் பெருவிழா மாநாட்டுக்காக தைலாபுரத்தில் இருந்து நேற்று முன்தினம் சென்ற ராமதாஸிடம் பொதுக்குழு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சொல்வதற்கு ஒன்றுமில்லை என சோகத்துடன் கூறிவிட்டு பூம்புகார் சென்றார்.
இது பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மகளிர் மாநாடுக்கு அழைப்பு விடுத்து பட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் நேற்று நாளிதழ்களில் முழு பக்கம் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முழுக்க முழுக்க அன்புமணியை தாக்கி வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. அதில், ‘‘தாயின் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
வன்னிய இனத்தின் வரிபுலியே! சிங்கத்தின் கர்ஜனையே! நீதிமன்றத்தில் நீ(தி)ங்கள் தோற்றிருக்கலாம்! ஆனால் எங்கள் சாதி மன்றத்தில் என்றென்றும் நீ(ங்கள்)மட்டுமே நிரந்தரமாய் வீற்றிருப்பாய்! அய்யா... உன்னால் பதவி பெற்றோர் உன் பதவியை பறிக்க முயல்வதா? பதவியை காத்துக்கொள்ள பதர்கள் அங்கே பாசத்தால் நேசத்தால் தொண்டர்கள் நாங்கள் இங்கே! உன்னால் பதவிக்கு பெருமை! பதவியால் உனக்கில்லை பெருமை!
அன்பில்லாதோரிடம் MONEY (மணி) இருக்கிறது. தந்தையை சிறுமைப்படுத்தும் தனயன், தமிழ்நாட்டை காப்பதா? தலைவனுக்கெல்லாம் தலைவனை தலைகுனிய வைப்பதா? எங்கள் குலசாமியே! இனமானம் காக்கும் இன்னுயிரே!! பாட்டாளிகள் நாங்கள்! படையாட்சிகள் நாங்கள்!! வன்னியகுல சத்திரியர்கள்!!! வரலாறு எழுதுவோம்...
எங்கள் வாழ்வும்-எங்கள் வளமும் டாக்டர் அய்யா மட்டுமே என்று என்னெறன்றும் முழங்குவோம்’’ என்று கூறப்பட்டுள்ளது. அன்புமணியை விமர்சித்து முதல்முறையாக பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று மகளிர் பெருவிழா மாநாட்டிலும் அன்புமணியின் படங்கள் முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.