Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களுக்கு தந்தை யார் என்று தெரியாது, எங்களுக்கு யார் என்று தெரியும்: அண்ணாமலையின் அறிக்கைக்கு, செல்வப்பெருந்தகை பதிலடி

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த இளையபெருமாளின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இளையபெருமாள் உருவபடத்துக்கு இருவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவில், ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘ நகரமயமாதல் போன்ற காரணிகளால் சாதிய பாகுபாடு பெருமளவு குறைந்திருக்கிறது. ஆனால் கிராமங்களில், சிறிய நகரங்களில் இன்றளவும் சாதி தீண்டாமை போன்ற கொடுமைகள் இருக்கிறது. அது இருக்கும் வரை முழு சுதந்திரம் பெற்ற இந்தியாவாக ஏற்றுக் கொள்ள முடியாது.

அவதார புருஷன், நான் பயாலஜிக்கல் பிறப்பு என்று சொல்பவர்களை எல்லாம் நம்பாதீர்கள். வன்முறை இலக்கணத்தை தவிருங்கள், எந்த மனிதனையும் வழிபடாதீர்கள், சமுதாய சுதந்திரம் வேண்டும் இவைகள் நிறைவேறினால் தான் நாடு முழு சுதந்திரம் அடையும்’’ என்றார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: அரசியல் அரைவேக்காடு அண்ணாமலை அறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தி என கூறி அன்னை இந்திரா காந்தியை முன்னிறுத்துவதாக தெரிவித்துள்ளார். உங்களுக்கு தந்தை யார் என்று தெரியாமல் இருக்கலாம். எங்களுக்கு எங்கள் தந்தை யார் என்று தெரியும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட அண்ணாமலை போன்றவர்களை எதிர்ப்பதற்காக பெரியவர் இளையபெருமாள் தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியை சீர்குலைக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை அனுப்பியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்பை ராகுல் காந்தி காட்டும் பொழுது உங்களுக்கு அச்சம் பயம் ஏற்படுகிறது. பாசிச சக்திகளை எதிர்க்க, அகற்ற, ஒழிக்க இந்தியா கூட்டணி வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், மேலிட பொறுப்பாளர் வல்ல பிரசாத், மூத்த தலைவர்கள் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி விஸ்வநாதன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், பொருளாளர் ரூபி மனோகரன், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், முத்தழகன் மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் தி.நகர் ராம், வக்கீல் செல்வம், அருள் பெத்தையா, மயிலை தரணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.