காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஊராட்சி ஜொள்ளம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(58), விவசாயி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இவரது மகன் சரவணன் (32). இந்நிலையில், ஜெய்சங்கர் 2வதாக சித்ரா (45) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், முதல் மனைவியின் மகன் சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல், குடித்து விட்டு தகராறு செய்து வந்து உள்ளார்.அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், சரவணன் சித்ராவுக்கு, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்ரா முறையிட்டதால், ஜெய்சங்கரும் மகனை கண்டித்துள்ளார். ஆனால், அதை பொருட்படுத்தாத சரவணன், தொடர்ந்து சித்ராவிடம் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், ஜெய்சங்கர், அவரது மற்றொரு மகன் கோவிந்தராஜ் ஆகியோர் அன்பரசு (27) என்பவரை துணைக்கு அழைத்து நேற்று முன்தினம் இரவு, போதையில் வீட்டிற்கு வந்த சரவணனை, மேல் மாடிக்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்து உதைத்து, செங்கல் மூலம் தாக்கி உள்ளனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை, மாடியில் இருந்து மூவரும் தரதரவென இழுத்து வந்து வீட்டிற்கு முன்பு போட்டு விட்டு சென்று விட்டனர். மறுநாள் காலை, சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கூறிய நிலையில், காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை அம்பலமானது. இதையடுத்து, ஜெய்சங்கர், அவரது மகன் கோவிந்தராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

