Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு பக்கம் அலுவலகம்... மறுபக்கம் விவசாயம்...

இயற்கை விவசாயம், மரபு வழி வேளாண்மை என எனக்குத் தெரிந்த விவசாய முறையில் எனது நிலத்தில் என்ன பயிரிட முடியுமோ அதை முழு மனதோடு செய்து வருகிறேன் என தனது பேச்சைத் தொடங்கினார் கலைச்செல்வன். கிருஷ்ணகிரியில் உள்ள ஊத்தங்கரைப் பகுதியைச் சேர்ந்த இவர், அவரது தோட்டத்தில் தென்னை பயிரிட்டு வருடம் லட்சத்திற்கும் மேல் வருமானம் பார்த்துவருகிறார். ‘எனக்கு சொந்த ஊரு ஊத்தங்கரை செங்கல்பட்டிதான். பிறந்தது கிருஷ்ணகிரியா இருந்தாலும், சென்னையில்தான் என்னுடைய பொறியியல் படிப்பை முடித்தேன். கல்லூரி படிக்கும் போதே எனக்கு இயற்கை விவசாயத்தின் மேல் ஒரு நாட்டம் இருக்கும். சென்னையில் அப்போது நடைபெறும் இயற்கைக் கண்காட்சிகளில் நான் தவறாது கலந்துகொள்வேன். அதில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. கல்லூரியை முடித்ததும் சென்னையிலே ஒரு தனியார் கம்பெனியில் இஞ்சினியராக பணிபுரிய தொடங்கினேன். அப்போதும் வார விடுமுறையில் வீட்டிற்கு சென்று விவசாயம் செய்வேன். பின்னர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இது கிருஷ்ணகிரிக்கு அருகில் இருப்பதால் விவசாயத்தின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக வாரத்தில் மூன்று முறை வீட்டிற்கு வந்து செல்வேன். எனக்கு இயற்கை விவசாயம் அந்தளவுக்கு பிடிக்கும்.

எங்களுக்குச் சொந்தமான நான்கு ஏக்கரில், முதல் இரண்டு ஏக்கரில் தென்னையும் மீதமுள்ள இரண்டு ஏக்கரில் மா வும் பயிரிட்டார் எனது அப்பா. இப்போது, அந்த தென்னையையும் மாமரங்களையும் நான் தான் பரமாரித்து வருகிறேன். அதுபோக, மரங்களுக்குத் தேவையான பஞ்சகவ்யம், சயனோ கரைசல், மீன் அமிலம் என அனைத்துக் கரைசல்களையும் நானேதான் தயார் செய்கிறேன். தென்னையை நடுவதற்கு முன்பு இரண்டு அடி குழி எடுத்து அதில் மாட்டு எரு, ஆட்டுப் புழுக்கை மற்றும் இலைச் சாறுகளை போட்டு தென்னங்கன்றை நடவு செய்வதாக அப்பா சொன்னார். நானும் அதன்படியே, இயற்கை உரங்களையும் இயற்கை இடு பொருட்களை பயன்படுத்தியும் மரங்களை பராமரித்து வருகிறேன். தென்னைக்கு தண்ணீர் பாய்ச்சும்போது மரத்தின் அடிப்பகுதியில் இருந்து நான்கு அடி இடைவெளிவிட்டு சுற்றி ஒரு பாத்தி கட்டி அதில்தான் தண்ணீர் பாய்ச்சுவேன். அப்போதுதான் வேர் அழுகல் இல்லாமல் மரம் நன்றாக வளர்ந்து தேங்காய் பெரிதாக வளரும். தற்போது அரசு மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ளேன். அதனால் சீரான இடைவெளியில் மரங்களுக்கு தண்ணீர் பாய்கிறது. மரத்தில் இருந்து தென்னங்குருத்து வருவதற்கே கிட்டதட்ட நான்கு வருடங்கள் ஆகிவிடும். இந்த நான்கு வருடத்தில் தென்னைக்குள் ஊடுபயிராக தக்காளி, கத்தரி போன்ற காய்கறி பயிர்களை நடவு செய்தேன். அதன் மூலமும் வருமானம் பார்த்தேன்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மக்கிய தென்னை ஓலைகளை மரத்தை சுற்றி போடுவேன். பிறகு அதன் மீது மாட்டு எரு, ஆட்டு புழுக்கை, உள்ளிட்டவற்றை போடுவேன். தோப்பிலேயே சயனோ பாக்டீரியா என்ற திரவ உரத்தை தயார் செய்து வருகிறேன். இது முழுக்க மாட்டு சாணத்தைக் கொண்டு தயார் செய்கிற உரம். மாட்டு சாணத்தை தண்ணீர் கலந்து நிலத்தில் குழிதோண்டி கீழ் பரப்பு மற்றும் மேற்பரப்பில் பாலிதீன் சீட்டை போட்டு வைத்துவிடுவேன். இதில் சாணி நன்றாக ஊறி பச்சை வண்ணத்தில் நீர் மாற்றி விடும். இதோடு மீன் அமிலத்தை கலந்து சொட்டு நீர் பாசனத்தின் மூலமே மரங்களுக்கு அனுப்புவேன். இதன்மூலம் மரங்களுக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். தற்போது எனக்கு ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 80 லிருந்து 120 தேங்காய் கிடைக்கும். இந்த தேங்காய்களை நானே நேரடியாக விற்பனை செய்கிறேன். ஒரு தேங்காயை ரூ.12 முதல் ரூ.20 க்கு விற்பனை செய்வேன். சராசரியாக ஒரு மரத்தில் 105 தேங்காய் கிடைக்கும். 120 மரத்தில் வருடத்திற்கு ரூ. 1.76 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. செலவு எனப் பார்த்தால் வருடத்திற்கு சராசரியாக ரூ.20ஆயிரம் ஆகும். ரூ.1.56 லாபமாக கிடைக்கிறது. தென்னையில் இருந்து தேங்காய்களை தேவைக்கேற்ப மட்டும் வெட்டி விற்பனை செய்வேன். விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையக்கூடிய சாகுபடி பொருளை நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களை கொடுக்கலாம் என பேசி முடித்தார் கலைச்செல்வன்.

தொடர்புக்கு:

கலைச்செல்வன்- 98437 67556.

தனது தோப்பில் உள்ள தென்னைகளுக்கு பஞ்சகவ்யம், அமிர்தகரைசல், மீன் அமிலம் மற்றும் சயனோ பாக்டீரியா போன்ற இயற்கை உரங்களை தயார் செய்யும் கலைச்செல்வன், அவருக்குத் தேவையானது போக மீதமுள்ள கரைசல்களை வெளியேவும் விற்பனை செய்கிறார். இதன்மூலம் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது என மகிழ்கிறார்.