விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டும் அல்ல. அது மனிதர்களின் வாழ்வாதாரம். ஆனால் நீர்ப்பற்றாக்குறை, உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு, நிலத்தின் தன்மை குன்றிப்போதல் போன்ற பிரச்சினைகளால் விவசாயம் இன்று கடுமையான சவால்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது போன்ற அசாதாரண சூழலில் விவசாயத்தைத் தொடர்ந்து சுயநிறைவு வாய்ந்ததாகவும், சீரான வளர்ச்சிக்கு உட்பட்டதாகவும் மாற்ற துல்லிய விவசாயம் என்பது ஒரு நவீன தீர்வாக உருவெடுத்து வருகிறது. வேளாண்மையில் பல புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மகசூலை அதிகரிக்கும் முறைதான் துல்லிய விவசாயம் (precision farming). இதை துல்லியப் பண்ணையம் என்றும் அழைப்பார்கள். இது ஜிபிஎஸ் சென்சார், ட்ரோன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாய செயற்பாடுகளை திட்டமிட்டு சீரான முறையில் மேற்கொள்ளும் நவீன செயல்முறை. நிலத்தின் தன்மை, பயிர்களின் தேவைகள் மற்றும் வளங்களின் பயன்பாட்டை சரியாக கணிக்க இந்தத் துல்லிய விவசாயம் நன்கு உதவுகிறது. இதனால் பயிர்களுக்கும், நிலத்திற்கும் தேவையான உரம், மருந்து உள்ளிட்டவற்றை சிக்கனமாகவும் நிலத்திற்கு ஏற்றவாறும் பயன்படுத்த முடிகிறது.
துல்லிய விவசாயத்தில் பல நவீன கருவிகள், புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜிபிஎஸ் கருவி மூலமாக நிலத்தின் புவிநிலைத் தகவல்கள் பெறப்படுகின்றன. அதேபோல நிலத்திலும், பயிர்களின் மேற்பரப்பிலும் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் நிலத்தின் ஈரப்பதம், வானிலை, பயிர்களுக்கு கொடுக்கப்படும் ஊட்டச்சத்து அளவுகள் போன்றவற்றைக் கண்காணிக்க உதவுகின்றன. ட்ரோன்கள் பயிர்களின் மேற்பரப்பைக் கண்காணித்து நோய்கள், நீர்ப் பற்றாக்குறை, வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவை உள்ள இடங்களை துல்லியமாக காண உதவுகிறது. இவை எல்லாம் தரவுகளாக சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்தத் தரவுகளை ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் அனலிசிஸ் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு சரியான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை வழங்குகிறது.
துல்லிய விவசாயத்தின் மற்றுமொரு வரப்பிரசாதம் சாகுபடிச் செலவுகளைக் கணிசமாகக் குறைப்பது. உரம், பூச்சி மருந்து, தண்ணீர் ஆகியவை தேவையான இடங்களில், தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வீண் செலவுகள் வெகுவாக தவிர்க்கப்படுகின்றன. ஒரு ஏக்கர் நிலத்தில், அந்த நிலத்தின் வழக்கமான மகசூலை விட கூடுதல் மகசூல் கிடைத்து, விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கிறது. நிலத்திலும் நீரிலும் ஏற்படும் மாசுபாடுகள் அதிகளவில் குறைக்கப்படுகிறது. பூச்சி மருந்துகளும் உரங்களும் குறைவாகப் பயன்படுத்தப்படுவதால் பயிர்களில் ரசாயனப் பாதிப்புகள் குறைந்து உணவுப் பாதுகாப்பு மேம்படுகிறது. அதேநேரத்தில் துல்லிய விவசாயம் விவசாயிகளின் தொழில்நுட்ப அறிவையும் வளர்க்கிறது.
ஒரு காலத்தில் விவசாயம் என்பது விவசாயிகளின் அபரிமிதமான உழைப்பினையும், அனுபவத்தையும் சார்ந்திருந்தது. ஆனால் இன்று ஒரு விவசாயி ஒரு டேட்டா அனலிஸ்ட் போல் செயல்படுகிறார். நிலத்திலிருந்து சேகரிக்கப்படும் தகவல்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளை அறிவார்த்தமாக எடுக்கும் நிலைக்கு விவசாயிகள் சென்றுவிட்டனர். இந்த மாற்றம் விவசாயத்தை ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழிலாக மாற்றி இருக்கிறது. இந்தியாவில் துல்லிய விவசாயம் மெதுவாகவே பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் பல முன்னேற்றம் அடைந்த மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் விவசாயிகள் இந்த முறையை ஏற்றுக்கொண்டு பயனடைய ஆரம்பித்துள்ளனர். அரசு இதற்காக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி பயிற்சி முகாம்கள், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மானியங்கள் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. வேளாண் அறிவியல் நிலையங்கள், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் பல வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் துல்லிய விவசாயத்தில் விவசாயிகள் இணைய பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன.
துல்லிய விவசாயத்தின் மற்றொரு முக்கிய அம்சத்தில் ஒன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு. இன்று இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் மிகவும் அதிகரித்துள்ளது. துல்லிய விவசாயம் மூலம் இயற்கை வளங்கள், நிலம், நீர் உள்ளிட்டவை பாதுகாக்கப்படுகின்றன. விவசாயத் தொழிலில் நிலைத்தன்மை (sustainability) மிக முக்கியம். அதற்கு வழிவகுக்கும் முறையாக துல்லிய விவசாயம் திகழ்கிறது.துல்லிய விவசாயம் என்பது வெறும் நவீன தொழில்நுட்பம் மட்டுமல்ல. இது விவசாயிகள் மற்றும் அவர்களது நிலத்திற்குள் ஒரு அறிவியல் சார்ந்த தொடர்பை உருவாக்கும் மேம்பட்ட செயல்முறை. இது விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும், சுற்றுச்சூழலைக் காக்கும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தும், வேளாண்மைத் துறையை உலக தரத்துக்கேற்ற வகையில் உயர்த்தும் ஒரு சக்திவாய்ந்த மாற்றம் என்றே துல்லிய விவசாயத்தைக் கூறலாம்.