கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் கடந்த 1990ம் ஆண்டு முதல் இயங்கி வரும் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை நாள் ஒன்றுக்கு 2,500 மெட்ரிக் டன் கரும்பு அரைக்கும் அரவைத்திறன் கொண்டது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதிகள், அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஆண்டிமடம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி வட்டங்களை உள்ளடக்கிய கிராமங்களை இந்த சர்க்கரை ஆலை விவகார எல்லைப் பகுதிகளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு நடவுப் பருவத்திலும் கரும்பு நடவுப்பணிகள் மேற்கொண்டு உற்பத்தி செய்யப்படும் கரும்புகள் அரவை செய்யப்பட்டு சர்க்கரை உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த ஆலையில் தற்போது 38,280 உறுப்பினர்கள் உள்ளனர். 2024-25 அரவைப் பருவம் கடந்த 6.1.2025 அன்று துவங்கப்பட்டு 10.3.2025 அன்று அரவை நிறுத்தம் செய்யப்பட்டது. இந்த அரவைப் பருவத்தில் 896 அங்கத்தினர்கள் 56.263.552 மெட்ரிக் டன்கள் கரும்பு அரவைக்கு அனுப்பி உள்ளனர். மத்திய அரசின் ஆதார விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3151/- வீதம் 56,263,552 மெட்ரிக் டன்களுக்கு உண்டான கரும்பு கிரயத் தொகை தமிழக அரசிடம் இருந்து வழிவகைக் கடன் பெற்று ஆலையின் அரவைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு கடந்த மே மாதத்தில் நிலுவை ஏதுமில்லால் சம்பந்தப்பட்ட கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து 2024-25 அரவைப் பருவத்திற்கு கரும்பு அனுப்பிய 896 கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் 56.263.552 மெட்ரிக் டன்களுக்கு உண்டான தொகை ரூ.1.96.35,986 அரசு மூலம் நேரடியாக ஆலையின் அரவைக்கு கரும்பு அனுப்பிய அனைத்து கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விளைவிக்கும் கரும்புகள் அரவைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது.