தாத்தா, அப்பா காலத்திலெல்லாம் ரசாயன உரங்கள் பயன்படுத்திதான் விவசாயம் செய்தார்கள். நானும் கூட பத்து வருடம் அந்த முறையில்தான் விவசாயம் செய்தேன். திடீரென ஏதோ ஒரு யோசனை. நாம் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் உண்மையாகவே நல்ல பொருட்கள்தானா? என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது. அதற்கு கட்டாயம் இல்லை என்றே என் மனம் பதில் சொன்னது. அதன்பின்தான் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேன்’’ என்கிறார் காஞ்சிபுரம் புரிசை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையிலான ஒருங்கிணைந்த பண்ணையை நிர்வகித்து வரும் தினேஷ், ஒவ்வொரு பயிரையும் வெற்றிகரமாக சந்தைப்படுத்தியும் அசத்துகிறார். அவரைச் சந்தித்தபோது தனது விவசாய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
``உளுந்து, வெள்ளைப்பூசணி, வேர்க்கடலை, நெல், கரும்பு... இதுதான் எங்களூர் விவசாயம். நானும் அந்த விவசாயம் செய்தவன்தான். எப்போது இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேனோ, அப்போதே எனது விவசாய முறையையும், பயிரிடும் பயிர்களையுமே மாற்றிக்கொண்டேன். எனக்கு 45 வயதாகிறது. பத்தாவது வரை படித்திருக்கிறேன். நான் பார்த்து கடந்த 40 வருடங்களாக எனது வீட்டில் விவசாயம் செய்து வருகிறார்கள். நெல், கரும்பு தொடங்கி அன்றாடம் அறுவடை செய்யப்படும் காய்கறிப் பயிர்கள் வரை அனைத்தையும் சாகுபடி செய்வார்கள். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு லாரி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த சமயத்தில் விவசாயத்தில் நானே நேரடியாக இறங்கினேன். பத்து வருடங்கள் ரசாயன உரங்களைப் பயன்படுத்திதான் விவசாயம் பார்த்தேன். அந்த சமயத்தில் எனக்கு காய்ச்சல், தலைவலி என்றால் கூட நாட்டு வைத்தியம், மூலிகை வைத்தியம்தான் எடுத்துக்கொள்வேன். அப்போது எனக்கு ஒரு விசயம் தோன்றியது. நாட்டு வைத்தியத்தையும் மூலிகை வைத்தியத்தையும் தேடிப் போகிற நாம், உணவுப்பொருட்களை மட்டும் ஏன் ரசாயன முறையில் விளைவிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதன் பயனாய் நஞ்சில்லா உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி செய்தால், நாமும் நமது உணவுப்பொருட்களை வாங்குபவர்களும் நோயில்லாமல் வாழலாமே என்று தோன்றியது.
அதன்பின்தான் நான் இயற்கை விவசாயம் பக்கம் திரும்பினேன். கடந்த ஐந்து வருடங்களாக இயற்கை விவசாயம் செய்துவருகிறேன். எனக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த இரண்டு ஏக்கரையும் தற்போது இயற்கை முறையிலான ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றி இருக்கிறேன். இந்த நிலத்தில் ஆடு, கோழிகள், பல வகையான மரங்கள் என பலவற்றை வளர்த்துவருகிறேன். குறிப்பாக ஐந்தடுக்கு முறையில் விவசாயம் செய்து வருகிறேன். அதாவது, பல வருடம் பலன் தரக்கூடிய தென்னைக்கு அருகே எலுமிச்சை, சப்போட்டா, அதற்கு அடுத்த வரிசையில் ஒரு வருடத்தில் அறுவடை செய்யப்படும் மஞ்சள், அதற்கடுத்து வெண்டை, கத்தரி போன்ற மூன்று மாதப் பயிர்கள், அதற்கடுத்து ஒரு மாதத்தில் அறுவடை செய்யப்படும் கீரைகள் என அடுத்தடுத்த வரிசையில் ஐந்தடுக்கு முறையில் விவசாயம் செய்து வருகிறேன்.இப்படி, எனது நிலத்தில் 35க்கும் அதிகமான பயிர்களை சாகுபடி செய்து வருகிறேன். கீரையில் அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை மற்றும் அனைத்து வகை கீரைகளை சாகுபடி செய்து வருகிறேன். கூடவே, கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், பூசணி, மஞ்சள், சோளம் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்கிறேன். அனைத்து பயிர்களையும் ஊடுபயிர்களாக விதைத்து இருக்கிறேன்.
எனது நிலத்தில் இருந்து கிடைக்கிற விளைபொருட்களை வாரம் ஒருமுறையோ அல்லது தினசரியோ அறுவடை செய்து எனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறேன். பல வகையான பயிர்கள் இருந்தபோதும் அனைத்தையும் சிறு சிறு அளவில் பயிரிட்டு இருக்கிறேன். அனைத்து காய்கறிகளில் இருந்தும் சிறிய அளவில் விளைச்சல் கிடைக்கும் என்பதால் எனது வீட்டைச்சுற்றி வசிக்கும் குடும்பங்களிடமே விற்பனை செய்து விடுவேன். கூடுதலாக கிடைக்கும் காய்கறிகளை மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்கிறேன். எனது பண்ணையில் செலவு எனப் பார்த்தால் களை பறிப்பதற்கு ஆகும் செலவு மட்டும்தான். மற்றபடி, பண்ணை உருவாக்கத்திற்கு தேவையான விதை, உரம் போன்றவற்றை நானே தயார் செய்கிறேன். எப்படிப் பார்த்தாலும் தினசரி வருமானத்திற்கு என்ன தேவையோ அதை எனது பண்ணையில் இருந்தே எடுத்து விடுவேன்’’ என மகிழ்ச்சியோடு பேசி முடித்தார் தினேஷ்.
தொடர்புக்கு:
தினேஷ்: 97895 84060.
பல வகையான பயிர்களை இரண்டு ஏக்கரில் சாகுபடி செய்துவரும் தினேஷ் ஆடு, கோழிகளை வளர்த்து, அவற்றின் மூலமும் வருமானம் பார்த்து வருகிறார். ஆடுகளை வளர்த்து இறைச்சிக்காகவும், வளர்ப்புக்காகவும் விற்கிறார். கோழிகளை வளர்த்து கறிக்காக விற்பனை செய்யும் அதேவேளையில் கோழிகளின் முட்டைகளை விற்றும் வருமானம் பார்க்கிறார்.
தனது நிலத்தில் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயம் பார்க்கும் தினேஷ், மற்றவர்களையும் இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கிறார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் உள்ள பலரது வயல்களுக்கு நேரடியாக சென்று அதுதொடர்பான பயிற்சிகளை வழங்குகிறார்.