களையெடுக்காத பயிர் கால் பயிர் என்பார்கள். ஆம். ஒரு பயிருக்கு நாம் அளிக்கும் நீர், உரம், மருந்து போன்றவற்றை களைகளும் பங்கிட்டுக்கொள்வதால் பயிர்களுக்குத் தேவையான சத்துகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் விளைச்சல் வெகுவாக பாதிக்கப் படும். இதை அறிந்துதான் களை நிர்வாகத்தை அனைத்து பயிர்களிலும் மேற்கொண்டு வருகிறோம். களையெடுப்பில் வெவ்வேறு முறைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
சொட்டுநீர் பாசனம்
களையைக் கட்டுப்படுத்த சொட்டுநீர் பாசன முறை ஒரு சிறந்த முறை. இந்த முறையில் நீர் பயிர்ச்செடிகளுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. களைச்செடிகளுக்கு நீர் கிடைக்காமல் போவதால் அவற்றால் வளர இயலாது.
இயந்திர முறை
இந்த முறையில் அதிக நேரம் பிடிக்கும். செலவும் அதிகம் பிடிக்கும். பயிர் வகை, களைச்செடி எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இயந்திர முறை மாறுபடும். களைச்செடி எண்ணிக்கை, மண்ணில் உள்ள களை வித்து எண்ணிக்கையின் அடிப்படையில் மாறுபடும். ஆகவே மண்ணில் உள்ள வித்துகளை ஆராய்ந்து அறிதலின் மூலம் நாம் களைச்செடி எண்ணிக்கையை ஊகித்து அவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.களைச் கொத்து, கொத்துக் கலப்பை, கிளறி, புல்வெட்டி, நெருஞ்சில் களை எடுப்பான் போன்றவை இயந்திர களையெடுக்கும் கருவிகளின் சில வகைகளாகும். தூரிகைக் களையெடுப்பான் கருவியானது காய்ப்பயிர்களுக்கு உகந்தது. களைக்கொத்து தனிச் செடிகளுக்கு இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. இயந்திர களையெடுக்கும் கருவிகளை பயன்படுத்திய பிறகு, களைக்கொத்து கொண்டும் களை அகற்றலாம்.
தெர்மல் (வெப்பம்) முறை
தீ மூட்டிகள் களைத் தடுப்பிற்கு நல்ல பலனளிக்கும். பயிர் விதை முளைக்கும் முன்பு இதை பயன்படுத்தலாம். நெருப்பு ஏற்படுத்தும் வெப்பம், உயிரணுக்களை விரிவடையச் செய்து அவற்றை
முற்றிலும் அழித்துவிடுகிறது.ப்ரோபேனை எரிபொருளாகக் கொண்ட தீமூட்டிகள், களைச் செடிகளை எரித்துச் சாம்பலாக மாற்றாது. அதற்கு மாறாக செல்களின் வெப்பநிலை அதிகரிக்கப்பட்டு அவை விரிவடையச் செய்கிறது.இதனால் உயிரணுக்களின் (செல்களின்) சுவர் கிழிக்கப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன.இயந்திர களையெடுக்கும் கருவிகளை அதிக ஈரப்பதமுள்ள நிலத்தில் பயன்படுத்த முடியாது. அதுபோன்ற இடங்களில் தீ மூட்டிகளைப் பயன்படுத்தலாம். முட்டைகோஸ் நாற்று உள்ள வயல்களிலும் இவ்வழக்கத்தை பின்பற்றலாம். அவை வெப்பத்தை சற்று தாங்கக் கூடியவை. காற்று குறைவாக உள்ள இடங்களில் வெப்பம் களைச்செடிகளை நன்றாக சென்றடையும். மாலை நேரம் இதற்கு உகந்த நேரமாகும்.
மண் வெப்பமூட்டல்
வெயில் மற்றும் குளிர் காலங்களின்போது, அங்கக உழவர்கள் நிலத்தை மண் வெப்பமூட்டும் முறையின் மூலம் சுத்திகரிக்கிறார்கள். இதில், பிளாஸ்டிக் விரிப்புகளை உழவு செய்த நிலத்தின் மீது விரித்து அவற்றின் ஓரங்களை இறுக மூடி விட வேண்டும். உள்ளே உருவாகும் வெப்பம், களை விதைகளை அழித்துவிடும்.
அகச்சிவப்புக் கதிர் களையெடுக்கும் கருவி
இவை தீமூட்டியைப் போன்று செயல்படுகிறது. அகச்சிவப்புக் கதிர்கள் சுலபமாக வெப்பத்தை அதிகரிக்கக் கூடியவை. சில களையெடுக்கும் கருவிகள் இக்கதிருடன் சேர்ந்து தீயையும் களை அகற்றத்திற்குப் பயன்படுத்துகிறது.
உறைதல்
திரவ நிலை நைட்ரோஜன் மற்றும் உறைப் பனிக்கட்டிகளை களைக்கட்டுப்பாட்டிற்கு உபயோகப்படுத்துகின்றனர்.
தாவர சுரப்பிகளால் ஏற்படும் பாதிப்பு
ஒரு வித்து முளைக்கும் பொழுதோ, வளரும் பொழுதோ சில திரவியங்களை வெளியிடும். அவை அருகிலிருக்கும் தாவரங்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திரவியம் வெளியிடும் செடியின் நிலையை உணர்த்தும்.இவ்வாறு திரவம் வெளியிடும் செடிகள் அருகிலிருக்கும் செடிகளை தொடர்புகொள்ளும் என்பது ஆச்சர்யமான உண்மை. பார்லி, ஓட்ஸ், சோளம், குதிரை மசால், சிவப்பு கிராம்பு, சூரியகாந்தி, கோதுமை மற்றும் தோட்டக்கலை பயிர்களான முள்ளங்கி, கேரட், முருங்கை ஆகியவை திரவ சுரப்பிகளால் அருகில் உள்ள தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியவை.
நலம் பயக்கும் நுண்ணுயிர்கள்
பயிர்ச் செடிகளைப் போலவே களைச் செடிகளும் நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் தன்மை கொண்டவை. இவ்வாறு களைச் செடிகளில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை பயிர் மேலாண்மைக்கு பயன்படுத்தலாம். இயற்கை எதிரிகளைக் கொண்டும் களைச் செடிகளுக்கு பாதிப்பு உண்டாக்கலாம். பூஞ்சை களைக்கொல்லிகள் கொண்டு களை அகற்றல் முறையை மேம்படுத்த உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், இவை களைச் செடிகளை மட்டுமே அழிக்கும். பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், களைச் செடிகளை அழிக்க முடியும் என்பதுதான். இந்தத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் களை மேலாண்மையில் மற்றொரு புதிய மைல்கல் உருவாகும்.
