நெல்லையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமம் பள்ளிக்கோட்டை. மானூர் அருகே உள்ள இந்தக் கிராமத்தில் விவசாயம்தான் பிரதானத்தொழில் என்றபோதும், பல விவசாயிகளுக்குக் கோழி வளர்ப்பு ஒரு துணைத்தொழிலாக இருந்து வருகிறது. அந்த வகையில் செல்லத்துரை என்பவர் கடந்த 21 ஆண்டுகளாக கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தத் தொழிலின் ஏற்ற இறக்கங்களையும், சவால்களையும் கண்ட அவரைச் சந்தித்துப் பேசினோம். `‘எட்டாவது வரைதான் படித்திருக்கிறேன். எனக்குச் சொந்தமாக இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. ஆனால் 21 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் கடுமையாக உழைத்தும், எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே சிரமமாக இருந்தது. அதனால், விவசாயத்தைத் தற்காலிகமாக ஓரம் கட்டிவிட்டு, நெல்லை டவுன் நயினாகுளம் மார்க்கெட்டில் ஒரு டீக்கடையை ஆரம்பித்தேன். டீக்கடை வருமானம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்தது. அதேநேரத்தில், புதிதாக ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக இருந்தது’ எனத் தனது கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார் செல்லத்துரை.
டீக்கடை வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, அவரது கடைக்குத் தேயிலைத்தூள் விநியோகம் செய்ய வந்த கோவில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு கோழிப்பண்ணை இருப்பதாகவும், அது நல்ல வருமானம் தருவதாகவும் கூறியுள்ளார். கூடுதல் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த செல்லத்துரைக்கு இது ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. உடனடியாக அந்த இளைஞருடன் அவரது ஊருக்குச் சென்று கோழிப்பண்ணையைப் பார்வையிட்டார். அப்போது நடந்ததை அவர் விவரித்தார். ‘`அந்தப் பண்ணையைப் பார்த்ததும் எனக்கும் ஆர்வம் வந்துவிட்டது. அமைப்பு, பராமரிப்பு, வருமானம் என அனைத்தையும் கேட்டறிந்தேன். அது எனக்குப் பிடித்திருந்தது. ஊர் திரும்பியதும், இதை நாமும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். 2004ம் ஆண்டு, 5000 சதுர அடி பரப்பில் கோழிப்பண்ணையை ஆரம்பித்தேன்’ எனும் செல்லத்துரை, தொழில் தொடங்கிய காலகட்டத்தில் அந்தப் பகுதியில் இரண்டு பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருந்தன.
போட்டி குறைவாக இருந்ததால், சிறு அளவில் கோழிப்பண்ணை அமைத்தவர்களுக்கு விற்பனை வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.‘`ஆரம்பத்தில், அந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு 7 பேட்ஜ் வரை கோழி வளர்ப்புக்குத் தேவையான குஞ்சுகள், தீவனங்கள் மற்றும் மருந்துகளைத் தருவார்கள். ஒரு பேட்ஜ் கோழிகளை 40 முதல் 45 நாட்களில் வளர்த்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது வளர்ப்பு கூலியாக ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் கிடைக்கும். ஒரு பேட்ஜில் அனைத்து செலவுகளும் போக, என் கையில் சுமார் 40 ஆயிரம் ரூபாய் நிற்கும். அந்த காலகட்டத்தில், ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை தாராளமாக வருமானம் கிடைத்தது. அந்த வருமானத்தைக் கொண்டுதான் பண்ணை பராமரிப்பு, வேலையாட்கள் கூலி என அனைத்தையும் சமாளித்தேன். அது ஒரு பொற்காலம். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கோழி வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கிறது என்ற செய்தி பரவியதால், தென் மாவட்டங்களில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கோழிப்பண்ணைகள் அதிகளவில் முளைத்தன.
போட்டி அதிகரித்ததால், உற்பத்தி பெருகியது. ஆனால், அதற்கேற்ப கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிக்கவில்லை. எங்கள் ஊரான பள்ளிக்கோட்டையிலேயே சுமார் ஒரு லட்சம் சதுர அடி அளவுக்கு கோழிப்பண்ணைகள் வந்துவிட்டன. என்னிடம் தற்போது பத்தாயிரம் சதுர அடி பரப்பளவில் பண்ணை உள்ளது. எனது அண்ணன், தம்பி இரண்டு பேர் என நாங்கள் மட்டுமே சுமார் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பண்ணைகள் அமைத்துள்ளோம். போட்டி காரணமாக, நிறுவனங்கள் வழங்கும் பேட்ஜ்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தற்போது கிலோவுக்கு 6.50 ரூபாய் என வளர்ப்பு கூலி நிர்ணயித்துள்ளார்கள். ஆனால், ஆண்டுக்கு 4 பேட்ஜ் கோழிகளைத்தான் நான் வளர்க்கிறேன். ஒரு பேட்ஜுக்கு 50,000 முதல் 60,000 ரூபாய் வரை கிடைக்கிறது.
அப்படிப் பார்த்தால், அனைத்து செலவுகளும் போக, ஒரு ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. கோழி வளர்ப்பு என்பது அதிக முதலீடு மற்றும் அதிக கவனம் தேவைப்படும் தொழில். இதில் லாபம் இருப்பது போலவே, அபாயங்களும் அதிகம். வெயில் காலத்தில் கோழிகளுக்கு ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பத்தாக்கு நோய் வந்துவிடும். ஒரே நாளில் நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்துவிடும் அபாயம் உள்ளது. அதேபோல, மழைக்காலத்தில் பண்ணையில் ஈரப்பதம் அதிகரித்தால், புழுக்களின் தொல்லை அதிகமாகி, கோழிகள் பாதிப்படையும். அம்மை நோய், கழிச்சல் போன்ற நோய்த்தொற்றுகள் வந்தால், ஒரு பேட்ஜ் மொத்தமும் வீணாகிவிடும். இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்பதையும் தெரிவித்தார்.
தொடர்புக்கு:
செல்லத்துரை: 97916 67252.
 
  
  
  
   
