Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் தரைப்பாலம் இல்லாததால் விவசாய நிலங்களுக்கு 30 கிமீ சுற்றி செல்லும் அவலம்: பாலம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, மாளந்தூர் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே தரைப்பாலம் இல்லாததால் தங்களது விவசாய நிலங்களுக்கு சுமார் 30 கி.மி., தூரம் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே, மாளந்தூர் கிராம ஆரணி ஆற்று பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே மாளந்தூர், கல்பட்டு, ஆவாஜிப்பேட்டை ஆகிய கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவ மாணவிகள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில், விவசாயிகள் ஆற்றின் மற்றொரு கரையோர பகுதியில் நெல், பூ செடிகள் ஆகியவைகளை பயிர் செய்துள்ளனர். மேலும், தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி தண்ணீர் நிரம்பி திறக்கப்பட்டதாலும், நந்தனம் மலை பகுதியில் இருந்து தண்ணீர் வருவதால் ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், மாளந்தூர் விவசாயிகள் தாங்கள் வைத்த பயிர்களை விவசாயம் செய்ய மற்றொரு கரைக்கு செல்ல 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்கின்றனர். எனவே, இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மாளந்தூர் பகுதியில் உள்ள ஆரணியாற்றின் குறுக்கே மாளந்தூர்-சென்னங்காரணி இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கடந்த 2019ம் வருடமே திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தரைப்பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘மாளந்தூர் ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளோம்.

எங்களது நிலம் ஆற்றின் மற்றொரு கரையோரம் உள்ளது. இதை நாங்கள் பார்க்க செல்ல முடியவில்லை. ஏனென்றால், தற்போது ஆற்றில் தண்ணீர் வருவதால் எங்களால் அக்கரைக்கு சென்று எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யமுடியவில்லை. பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம் என 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இல்லையென்றால் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்க வேண்டியுள்ளது. எனவே, எங்கள் கிராமத்திற்கும் (மாளந்தூர்) சென்னங்காரணிக்கும் இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும்’ என்றனர்.