Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்: நெல் திருவிழாவில் அமைச்சர் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி: விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் டிஆர்பி ராஜா வலியுறுத்தினார். திருத்துறைபூண்டியில் 19வது தேசிய நெல் திருவிழா நேற்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில், பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமனால் மீட்டெடுக்கப்பட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. விழாவில் பங்கேற்ற 6 ஆயிரம் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகள் மானியமாக வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தொழில்வளர்ச்சி மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா, உழவர்களுக்கு இலவச விதை நெல் வழங்கி பேசியதாவது: திமுக ஆட்சி அமைந்தவுடன் நெல் ஜெயராமன், நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்த இயற்கை விவசாய பாடங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சட்டசபையில் பேசினோம். முதல்வர் உடனடியாக பாரம்பரிய விதைநெல்களை பரவலாக்கம் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை விவசாயிகளுக்கு அரசே வழங்கும் என்று தெரிவித்தார். அதை அரசு செயல்படுத்தி வருகிறது.

விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். நான் வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்றபோது விவசாயம் தொடர்பான வளர்ச்சி குறித்து பார்வையிடாமல் வந்ததில்லை. அங்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக வியட்நாம் சென்றிருந்தபோது மாம்பழத்திலும், இளநீரிலும் செய்யப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனையை பார்த்தேன்.

இந்தியாவிலேயே தமிழகம் திராவிட மாடல் ஆட்சியில் நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மாநிலமாக திகழ்கிறது. அதற்கு வளர்ச்சி அடைந்த தொழில்கள் பேருதவியாக இருக்கின்றன. அதே சமயம் வேளாண் தொழில் போன்ற அடிப்படைத் தொழில்களிலும் மதிப்பு கூட்டுதல் செய்து தொழில் வளர்ச்சி அடையுமேயானால் தமிழகம் இன்னும் நல்ல முன்னேற்றமடையும். இதற்கு வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் வலுப்பெற வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்ய தயாராக உள்ளனர்.

மற்றொரு பக்கத்தில் விவசாயிகளின் விளை பொருட்களை மதிப்பு கூட்டி வாங்குவதற்கு தயாராக உள்ளனர். இதற்கு இடையில் சந்தைப்படுத்துதல் மட்டுமே பிரச்னையாக உள்ளது. இதற்கு தீர்வு காண மாநில திட்டக்குழு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. பாரம்பரிய நெல் மீட்பு பணியை மேற்கொண்ட நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் ஆளுயர சிலை அடுத்த ஆண்டுக்குள் வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.