விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி டெல்லியில் 5 நாள் தொடர் போராட்டம்: திருச்சியில் விவசாய சங்கங்கள் அறிவிப்பு
திருச்சி: விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கேட்டு டெல்லியில் 5 நாள் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக நேற்று திருச்சியில் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளனர். திருச்சியில் ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் நேற்று கூட்டாக அளித்த பேட்டி: தமிழகத்தில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளை உடனே திறக்க வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் தினம்தோறும் 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையை மாற்றி தினம்தோறும் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்ப வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி சுமைதூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும். ஒன்றிய அரசை காரணம் காட்டாமல் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும். விதை நெல், உரம், பூச்சி மருந்து தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரசார பயணம் மேற்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம். இதேபோல் விவசாய விளைப்பொருட்களுக்கு லாபகரமான விலை கேட்டு நவம்பர் 7ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.