*100 ஏக்கர் குறுவை பயிர்கள் கருகும் அபாயம்
சீர்காழி : மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம், பாதரக்குடி, சேந்தங்குடி ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குருவை நெற்பயிர்கள் கதிர் வரும் நிலையில் உள்ளது.
பழவாரிலிருந்து பிரியும் கிளை பாசன வாய்க்காலான தெற்கு வெளி, வடக்குவெளி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கதிர் வந்த வயல்கள் வெடிப்புவிட்டு, பயிர்கள் காய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நாகை-விழுப்புரம் நான்கு வழி சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனம் முகாமிற்கு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கிருந்த பாசன வாய்க்கால்களை லாரி போன்ற கனரக வாகன சென்று வர ஏதுவாக வாய்க்கால்கள் மூடப்பட்டு விட்டன.
இதனால் அப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 100 ஏக்கருக்கும் மேலான குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால் வேதனை அடைந்த விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மூடப்பட்டுள்ள பாசன வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும், காயும் பயிர்களை காப்பாற்ற நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், கடைமடை பகுதியான சீர்காழி பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.