*அந்தியூர் அருகே பரபரப்பு
அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி உள்ளிட்ட வனப்பகுதி ஒட்டியுள்ள நிலங்கள் கடந்த 1958 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலங்கள் 10 ஆண்டுகளுக்கு பின்பு நிபந்தனைகளை நீக்கி அயன் பட்டாவாக பயன்படுத்தப்படுகிறது. 1968 ஆண்டுக்குப் பிறகு நிபந்தனை நீக்க வேண்டிய நிலையில் விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்டது. இந்த பட்டாக்கள் நிபந்தனையுடன் கூடிய பட்டாவாகவும், ஜீரோ வேல்யூவாகவும்
தற்போது இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் இதனை விற்க முடியாது. மேலும் வங்கிகளில் கடன் பெற முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. நிபந்தனை பட்டாக்களை நீக்கி தரவேண்டும் எனக்கோரி, அந்தியூரில் கடந்த மாதம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம், காத்திருக்கும் போராட்டம் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இதுவரை அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காலை முதல் விவசாயிகள் தங்கள் வீடு, விவசாய நிலங்கள் மற்றும் வாகனங்களில் கருப்புக் கொடி கட்டி அரசுக்கு தங்களது கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில் அத்தாணி, நகலூர், பெருமாபாளையும், நஞ்சமடை குட்டை, பாலகுட்டை, கள்ளிமடை குட்டை, மந்தை, வட்டக்காடு எண்ணமங்கலம், சென்றாயனூர், பாப்பாத்திக்காட்டு புதூர், முரளி, தொட்டி கிணறு உள்ளிட்ட வனப்பகுதியையோரம் உள்ள விவசாய நிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி கட்டி உள்ளனர்.
இப்போராட்டம் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் அந்தியூர் அதன் சுற்றுவட்டார வனப்பகுதி ஒட்டிய பகுதிகளில் ஏடிஎஸ்பி விவேகானந்தன், பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இ தனால் அந்தியூர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலை வருகிறது.