*அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உடுமலை : உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பகுதிக்கு ஆறு வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்நிலையில், கிளை வாய்க்கால்களை அடைத்து, ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் வர விடாமல் தடுத்து, பிரதான கால்வாயில் சுமார் 450 கன அடி நீரை வேறு தேவைகளுக்கு கொண்டு செல்வதாக கூறி விவசாயிகள் நேற்று செங்கண்டிபுதூரில் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் பகுதி பொறுப்பாளர் வீரப்பன் கூறியதாவது:அமராவதி பிரதான வாய்க்கால் பாசனத்தில், அணை கட்டியதில் இருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக மடைகளை அடைத்து தண்ணீர் கொண்டு செல்லும் வழக்கமே கிடையாது. ஆனால் தற்போது, அணையில் இருந்து அனைத்து கிளை வாய்க்கால்களையும் அடைத்து, கடந்த 7 நாட்களாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. 450 கனஅடி தண்ணீர் முற்றிலும் விதிகளுக்கு புறம்பாக செல்கிறது.
கேட்டால் குளத்துக்கு செல்கிறது என்கின்றனர். குளத்துக்கு தண்ணீர் விட அரசாணை எதுவும் கிடையாது. ஆயக்கட்டு விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். 25 ஆயிரம் ஏக்கரில் பயிர் செய்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், ஒரு சிலரின் வாய்மொழி உத்தரவு காரணமாக தண்ணீர் செல்வதாக கூறுகிறார்கள். எனவே, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்துகிறோம். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.