Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிகமான நெல் விளைச்சல் காரணமாகவும், இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விவசாயிகள் நேரடியாக அரசிடம் அவர்கள் விளைவித்த நெல்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1973-ம் ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 1996-ல் தமிழ்நாடு முழுமைக்குமாக பரவலாக்கப்பட்டது.

தற்போது தமிழகம் முழுவதும் 3,529 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்குகின்றன. சாகுபடி பருவத்திற்கு ஏற்ப அந்தந்த பகுதிகளில் நிலையங்கள் தொடங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது 5.89 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பருவ நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது.

தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 100 கிலோ எடை கொண்ட ஒரு குவின்டால் சன்ன ரக நெல் 2,550 ரூபாய்க்கும், மோட்டா ரக நெல் 2,500 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதுவே அரசின் வேளாண் வணிகத்துறை சார்பிலான ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விட நேரடி கொள்முதல் நிலையங்களில் கூடுதலான தொகைக்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நாடி செல்கின்றனர்.

அவ்வாறு நெல் மூட்டைகள் எடுத்துச் செல்கையில் அங்குள்ள பணியாளர்கள், விவசாயிகள் கொண்டு செல்லும் மூட்டைகளை உடனுக்குடன் எடை போடாமல் காலதாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் அன்றன்றைக்கு கொள்முதல் செய்யாததால் மூட்டைகள் தேக்கமடைகின்றன. பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கான கிடங்கு மற்றும் கூடார வசதி இல்லாததால் திறந்த வெளியில் இருக்கும் மூட்டைகள் நனைந்து நெல்மணிகள் முளைக்கின்றன.

அதேசமயம் ஈரப்பதம் மற்றும் முளைப்புத்திறனை காரணம் காட்டி கொள்முதல் நிலைய பணியாளர்கள் குறைவான விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வதாகவும், ஒரு மூட்டைக்கு 40, 50 ரூபாய் கையூட்டு கேட்பதாகவும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து புகார்கள் விவசாயிகளால் எழுப்பட்டு வருகிறது.

அதேசமயம், விவசாயிகளின் மூட்டைகளை உடனுக்குடன் எடை போடாததற்கு காரணம் விவசாயிகள் பெயரிலான சிட்டா அடங்கலை போலியாக பயன்படுத்தி வியாபாரிகள் விவசாயிகளிடமும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் குறைந்த விலைக்கு நெல்களை வாங்கி அவற்றை நேரடி கொள்முதல் நிலைய பணியாளர்களுடன் கூட்டு சேர்ந்து மொத்தமாக வியபாரிகள் முட்டைகளை எடை போட்டு கொள்முதல் செய்து கொள்கிறார்கள்.

இதற்கு ஆயிரக்கணக்கில் கையூட்டு பெறுவதுமான காணொளிகள், செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவுகின்றன. விவசாயிகளும் புகாராக தெரிவிக்கின்றனர். அதேசமயம் சில பணியாளர்கள் வியாபாரிகளிடம் வாங்கி பழகியது போலவே சாமானிய விவசாயிகளிடமும் கையூட்டு கேட்பதாகவும், கொடுக்க மறுக்கும் விவசாயிகள் நெல் மூட்டைகளை பதிவு மூப்பையும் தவிர்த்து வேண்டுமென்றே சில காரணங்கள் கூறி நிறுத்தி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கொள்முதல் நிலையத்தில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முன்பதிவு மூப்பு படி மூட்டைகளை தான் எடை போட வேண்டும் என்கிற நிலையில், வியாபாரிகள் பணியாளர்கள் உதவியுடன் பதிவில் குளறுபடி செய்து வியாபாரிகள் மூட்டைகளை பணியாளர்கள் எடை போட்டுவிட்டு, விவசாயிகளின் மூட்டைகளை காலதாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

எனவே, பரவலாக நடைபெறுகின்ற இந்த முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தடுப்பதுடனும், விவசாயிகளின் ஆவணங்களை போலியாக வியாபாரிகளுக்காக கொடுக்கின்ற அலுவலர்கள் மீதும், வியாபாரிகளின் நெல்லை மொத்தமாக கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளின் நெல்லை புறக்கணிக்கும் பணியாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதை முறையாக, நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.