Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி இயந்திர நடவு பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

*ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம்

நாகர்கோவில் : தமிழக அரசு நெல் சாகுபடியில் இயந்திர நடவு செய்தால், ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளதால், குமரி மாவட்ட விவசாயிகள் பலர் இயந்திர நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ நெல் சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம் ஆகி வருகின்றனர்.

மாவட்டத்தில் சுமார் 6500 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. நெல் சாகுபடி செய்யும்போது பொடி விதைப்பு, தொழிவிதைப்பு, ஆட்களை கொண்டு நாற்றங்காலில் இருந்து நாற்றுகளை எடுத்து நடவு செய்வது, இயந்திர நடவு, டிரம்சீலர் நடவு என பலவிதமாக நடவு செய்து வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணிக்காக பேச்சிப்பாறை அணை கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்தது. இதனால் மழை தண்ணீர் மற்றும் அணையில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். பறக்கை, சுசீந்திரம் பகுதியிலும் நடவு பணி தொடங்கியுள்ளது. சுசீந்திரம் பகுதியில் ஒரு சில விவசாயிகள் பொடி விதைப்பு மூலம் சாகுபடி செய்துள்ளனர்.

இதுபோல் தோவாளை சானல், அனந்தனார் சானல், பத்மநாபபுரம் புத்தனார்சானல் ஆகிய சானல்கள் மூலம் பாசன வசதி பெறும் வயல்களிலும் நாற்றாங்கல் தயாரித்து நடவு பணியை மேற்கொண்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் நடவு பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதனால் சில நேரங்களில் நடவு பணிகளை மேற்கொள்வதற்கு தாதமமும் ஏற்பட்டு வருகிறது.

மேலும் விவசாயிகள் பல வித நெல் ரகங்களை பயிரிடும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். சாகுபடியின்போது இயந்திர நடவு செய்யும்போது பயிர்கள் போதிய இடைவெளியுடன் நடவு செய்யப்படுகிறது.

இதனால் நடவு செய்யப்படும் நாற்றில் தூர் கட்டுவது அதிகரித்து, மகசூலும் அதிகமாக கிடைத்து வருகிறது. விவசாயிகள் மத்தியில் இயந்திர நடவு பணிகளை கொண்டு சேர்க்கும் வகையில் வேளாண்மை துறை அதிகாரிகள், ஊழியர்கள் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் மானியமாகவும் வழங்கி வருகிறது. இதனால் குமரி மாவட்ட விவசாயிகள் இயந்திர நடவு பணியை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இயந்திர நடவு மேற்கொள்ளும் விவசாயிகள் உழவன் செயலியில் எவ்வளவு பரப்பளவில் சாகுபடியை மேற்கொள்கிறோம் என பதிவு செய்ய வேண்டும். குமரி மாவட்ட விவசாயிகள் பலர் உழவன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது மழை பெய்ததால் உழவு பணியை மேற்கொண்டு விவசாயிகள் இயந்திர நடவுபணியை மேற்கொண்டு வருகின்றனர்.