கல்வராயன்மலை : கல்வராயன்மலை பகுதியில் உள்ள 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் தங்களது விளைநிலங்களில் மரவள்ளி, மக்காச்சோளம், நெல், மணிலா, போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். இதுபோல தொடர்ந்து ஒரே மாதிரியான பயிர்களை நடவு செய்தால் பூச்சிகள் அதிகளவில் தாக்குவதால் மகசூல் குறைந்து விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர்.
இதன் காரணமாக அதிக மகசூல் கொடுக்கக்கூடிய புதிய ரகங்களை பயிர் செய்து அதன் மூலம் அதிக லாபம் ஈட்டும் வகையில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு தொடர்ந்து பல்வேறு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் உள்ள முண்டியூர், மேல்முருவம், வாரம், கருவேலாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் தாய்லாந்து ரக மரவள்ளி பயிர்களை சொட்டுநீர் பாசன முறையில் நடவு செய்துள்ளனர். இப்பகுதியில் இந்த மரவள்ளி செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
இந்த ரக மரவள்ளி செடிகளை பூச்சிகள் அதிகளவில் தாக்குவதில்லை. இதனால் லாபம் அதிகரிக்கும் என்பதால் இந்த ரக மரவள்ளி செடிகளை பயிர் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி
வருகின்றனர்.