Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேவைக்கு கிடைக்காத தண்ணீர் தேவையில்லாத போது கிடைக்கிறது: தெங்கம்புதூர் சானலில் வரும் தண்ணீரால் அறுவடை தொடங்குவதில் சிக்கல்: விவசாயிகள் பரிதவிப்பு

நாகர்கோவில்: தெங்கம்புதூர் கடைமடைக்கு தேவைப்படும்போது தண்ணீர் கிடைப்பது இல்லை. தேவையில்லாத போது தொடர்ந்து தண்ணீர் கிடைக்கிறது. இதனால் கன்னிப் பூ அறுவடை பணிகளை தொடங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் தற்போது கும்பபூ சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் அனந்தனார் சானலை நம்பி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. அனந்தனார் சானல் தண்ணீர் கடைமடையான தெங்கம்புதூர் சானலில் வரும். இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடைமடை பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளதால், குமரி மாவட்டத்தின் பிற பகுதியில் சாகுபடி பணிகளை தோடங்கும் போது தெங்கம்புதூர் பகுதியில் சாகுபடி பணி தொடங்குவது இல்லை. சாகுபடி தொடங்குவதற்கு அவர்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பது இல்லை. விவசாயிகளின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து கடைமடைபகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அதன்பிறகே அவர்கள் சாகுபடி பணியை மேற்கொள்வார்கள். சாகுபடி பணி தொடங்கிய பிறகும், அவர்கள் தண்ணீருக்காக பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கன்னிப் பூ சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருமழை பரவலாக பெய்தது.

குறிப்பாக மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகள் நிரம்பியது. தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அனைத்து பாசன கால்வாய், சானல்களில் தண்ணீர் அதிக அளவு வந்து கொண்டு இருக்கிறது. அனந்தனார் சானலிலும் தண்ணீர் அதிகம் வந்துகொண்டு இருக்கிறது. இதை தவிர நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாளசாக்கடை சுத்திகரிப்பு தண்ணீரும் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள வயல்களில் தேங்கி நிற்கிறது.

இதனால் வயல்களில் நெற்கதிர்கள் தயராகியுள்ள நிலையிலும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் பெரியநாடார், ஜெகன் ஆகியோர் கூறியதாவது: தெங்கம்புதூர் சானலின் கடைவரம்பு பகுதியில் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி பணி நடந்து வந்தது. சரியான நேரத்திற்கு தண்ணீர் கிடைக்காததால், சாகுபடி பரப்பளவு குறைந்து தற்போது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணி நடந்து வருகிறது.

அனந்தனார் சானலில் இருந்து தெங்கம்புதூர் சானல் பிரிந்து வருகிறது. சாகுபடி பணி தொடங்குவதற்கு முன்பு சானலை தூர்வாரி தண்ணீர் விடவேண்டும் என்று விவசாயிகள் ஆண்டுதோறும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. விவசாயிகள் அதிகாரிகளை பார்க்காமல் சில நேரங்களில் தண்ணீர் கொண்டுவர தெங்கம்புதூர் சானலில் உள்ள புதர்களை அகற்றும் பணியை மேற்கொள்வார்கள். இந்த வருடம் கன்னிப் பூ சாகுபடி செய்து, பல இன்னல்களுக்கு மத்தியில் வயல்களை பார்த்து தற்போது அறுவடை செய்யும் நிலையில் வயல்கள் தயாராகியுள்ளது. ஆனால் தற்போது தெங்கம்புதூர் சானலில் தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இந்த தண்ணீர் வயல்களுக்குள் பாய்கிறது. இதனை தவிர நாகர்கோவில் மாநகர பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள கழிவுநீர் வலம்புரிவிளை உரக்கிடங்கில் சுத்திகரிக்கப்பட்டு தெங்கம்புதூர் பகுதியில் விடப்படுகிறது.

இதற்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தெங்கம்புதூர்சானலில் வரும் தண்ணீர், பாதாளசாக்கடை சுத்திகரிப்பு செய்யப்பட்ட தண்ணீர் ஆகியவை வயல்களுக்குள் பாய்கிறது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடை செய்யும் இயந்திரங்களை இறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி தெங்கம்புதூர் கடைவரம்புக்கு வரும் தண்ணீரை நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தெங்கம்புதூர் சானலை நம்பி நெல் பயிரிடும் விவசாயிகள் சாகுபடி செய்யும்போது தண்ணீருக்கு போராடுவது தொடர் கதையாகி இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போத அறுவடையின் போது சானலில் வரும் தண்ணீரை நிறுத்துமாறு கோரிக்கை வைத்து உள்ளனர்.

கொள்முதல் செய்யப்படுமா?

பறக்கை பகுதியில் அறுவடை செய்தபோது நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அங்கு கூடுதலாக நெல் மூடைகளை வைக்கும் வகையில் ஷெட் அமைக்கும் பணி, கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் நெல் கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தெங்கம்புதூர் பகுதியில் அறுவடை செய்யப்படும் நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.