Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் தாமரை வளர்ப்பால் மாசுபடும் குளங்கள்

*நடவடிக்கை எடுக்கப்படுமா?

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித்தல் ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம் அணைகளில் இருந்து கிடைத்து வருகிறது. அணைகளில் இருந்து வரும் தண்ணீர் கால்வாய் வழியாக வந்து குளங்களில் நிரம்புகின்றன.

கடந்த காலங்களில் குமரி மாவட்டத்தில் 4 ஆயிரம் குளங்கள் இருந்ததாக கூறுகின்றனர். பின்னர் படிப்படியாக விளை நிலங்கள் வீட்டுமனையாக மாறியதன் காரணமாக குளங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் பெரிய குளங்களில் சட்டவிரோதமாக தாமரை பூ வளர்ப்பு தொழில் தீவிரமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிக அளவு வருகின்றன. இங்கு சுமார் 10 மாத காலங்கள் தங்கி முட்டை போட்டு குஞ்சு பொறித்தபிறகு குஞ்சு பறவைகளுடன் அவை தங்களது நாட்டிற்கு பறந்து செல்லும். அந்த அளவிற்கு குமரி மாவட்டம் பறவைகளை கவர்வதில் சிறந்து விளங்குகிறது.

சுசீந்திரம் குளம், தேரூர் குளம், மாணிக்கம்புத்தேரி குளம், வேம்பனூர் உள்பட பல்வேறு குளங்கள் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலங்களில் பெரிய குளங்களில் தாமரை வளர்ப்பதற்கு பொதுப்பணித்துறை அனுமதி வழங்கி வந்தது.

அப்போது வயல்களுக்கு தண்ணீர் திறப்பது, அடைப்பது சம்பந்தமாக விவசாயிகளுக்கும், தாமரை வளர்ப்போருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. மேலும் தண்ணீரும் மாசுபட்டு வந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தாமரை வளர்ப்பதற்காக குளங்களை குத்தகைக்கு விடுவதற்கு கோர்ட் தடை விதித்தது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தாமரை வளர்ப்பு லட்சங்களை குவிக்கும் தொழிலாக மாறி உள்ளது. இதனால் ரவுடி கும்பல்கள் இதில் நுழைந்துள்ளன. பல்வேறு கோஷ்டிகளாக பிரிந்து குளங்களில் தாமரை வளர்த்து இலை, பூக்களை பறித்து விற்பனை செய்து வருகிறார்கள்.

சுசீந்திரம், நல்லூர், தேரூர், அஞ்சுகிராமம், இரணியல், வேம்பனூர், பறக்கை, வடமதி, தெள்ளாந்தி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பெரிய குளங்களில் தாமரை வளர்ப்பு அதிகரித்துள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களிலும் இவர்கள் தாமரை விதையை தூவி, வளர்த்து நள்ளிரவில் பறித்து வருகிறார்கள்.

தாமரை வளர்க்கும் குளங்களில் இருந்து வயல்களுக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கும் பட்சத்தில் தாமரை வளர்ப்பு பாதிக்ககூடும் என்பதால், குளத்தில் இருந்து ெசல்லும் மடைகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கும், தாமரை வளர்ப்போருக்கும் சில நேரங்களில் தகராறு ஏற்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தாமரை பூ, இலைகளுக்கு மார்க்கெட்டில் நல்ல விலை இருப்பதால், அவர்களுக்கு தினமும் பல லட்சம் பணம் வருவாய் கிடைத்து வருகிறது.

இதனால் இந்த தொழிலை நடத்தி வருபவர்கள் தொழிலை விடுவதற்கு தயாராக இல்லை. மேலும் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர். இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு குமரி மாவட்ட குளங்களில் தாமரை வளர்ப்பவர்கள் மீது காவல்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.