Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மானாவாரி நிலங்களில் தொடர் அட்டகாசம் காட்டுப்பன்றியுடன் கலெக்டரை சந்திக்க வந்த விவசாயிகள்

*கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி : மானாவாரி நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டுப்பன்றியை பிடித்த விவசாயிகள் அதனை கலெக்டரிடம் காண்பித்து முறையிட வந்தனர். ஆனால் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டம் அழகாபுரி கிராமத்தில் இருந்து மெட்டில்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் தோட்டப்பாசன நிலங்களில் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து, மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பன்றிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் நிலங்களை சுற்றி விவசாயிகள் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். அந்த காட்சிகளை சோதனை செய்தபோது, அதிகாலை நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக நிலங்களுக்கு புகுவது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அதிகாலை அழகாபுரி கிராம விவசாயிகள் தங்களது நிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கூட்டமாக வந்த காட்டுப்பன்றிகள் மக்காச்சோள விதைகளை சேதப்படுத்த முயன்றது. அவற்றை விரட்ட விவசாயிகள் முயன்றபோது அவை தாக்க வந்தது. விவசாயிகள் அதனை விரட்ட முயற்சித்தபோது, ஒரு பன்றி மட்டும் அவர்களிடம் சிக்கியது. அதனை பத்திரமாக வாய் மற்றும் கால்களை கட்டி ஒரு சாக்கு பையில் வைத்து, கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜனுடன் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு உதவி கலெக்டர் இல்லை என்பதும், அவர் மாவட்ட கலெக்டருடன் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த ‘உயர்வுக்குபடி‘ வழிகாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுவிட்டார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து விவசாயிகள் பள்ளிக்கு சென்றனர். அங்கு வந்த டி.எஸ்.பி.ஜெகநாதன் தலைமையிலான போலீசார் காட்டுப்பன்றி இருந்த பையை தூக்கிச் சென்று விட்டனர். மேலும், விவசாயிகள் பள்ளியில் வேறு நிகழ்ச்சி நடப்பதால் கலெக்டரை இங்கு சந்திக்க வேண்டாம் என வெளியே அனுப்பினர்.

இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் மற்றும் விவசாயிகள் பள்ளிக்கு வெளியே காத்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும் கலெக்டர் வேறு பணிகள் காரணமாக விரைந்து சென்றதால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆதாரம் கேட்டதால் கொண்டு வந்தோம்

இதுகுறித்து வரதராஜன் கூறுகையில், “கடந்த திங்கட்கிழமை நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் குறித்து நாங்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம். அது காட்டுப்பன்றி இல்லை, வளர்ப்பு பன்றி என பன்றியின் மரபணு சோதனையில் தெரிவந்துள்ளதாக வனத்துறையினர் கூறினர். மேலும் காட்டுப்பன்றி என்றால் அதனை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என்றனர். இப்பகுதியில் வனத்துறை பொருத்திய கேமராவில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசங்கள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் உயிரை பணயம் வைத்து வயலில் புகுந்த ஒரு பன்றியை ஆதாரத்துக்காக பிடித்து வந்தால், கலெக்டரை சந்தித்து முறையிடவிடாமல் போலீசார் எங்களை வெளியேற்றி விட்டனர்.

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணமும் கிடைக்கவில்லை. பயிர் காப்பீடும் விடுவிக்கப்படவில்லை. தற்போது கடன் வாங்கி சாகுபடி செய்யப்படும் பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துகின்றன. ஒருமுனை தாக்குதல் என்றால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், விவசாயிகளான எங்கள் மீது பலமுனை தாக்குதல் உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்தாண்டு பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் காட்டுப்பன்றி உள்ளிட்ட பன்றிகள், மான், முயல் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். சேதமடைந்த பயிர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.