Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கினர் 2 குழந்தைகளுடன் விவசாயி தற்கொலை: உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் உருக்கமான மெசேஜ்

பண்ருட்டி: இரண்டு குழந்தைகளுடன் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிகுப்பத்தை சேர்ந்தவர் ராஜா(43). இவருக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முந்திரி பயிரிட்டுள்ளார். காட்டாண்டிகுப்பம் மற்றும் பண்ருட்டியில் சொந்தமாக வீடு உள்ளது. 10க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விட்டுள்ளார். இவர், மனைவி சுகன்யா (35) மற்றும் மகன் குமரகுரு (13), மகள் தாரணி‌ஸ்ரீ (7) ஆகியோருடன் பண்ருட்டி இந்திரா காந்தி நகரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது, சுகன்யா ஆசிட் குடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார். எனினும் சற்று மனநிலை சரியில்லாமல் இருந்துள்ளார். கடந்த 17ம் தேதி குறிஞ்சிப்பாடி சத்திரத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் ராஜா குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் பண்ருட்டி அருகே மாம்பட்டில் உள்ள மனைவியின் தாய் வீட்டில், சுகன்யாவை மட்டும் விட்டு விட்டு, 2 குழந்தைகளுடன் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

மனைவி மனநிலை பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் இருந்து வந்த ராஜா, நேற்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், மதிய வேலையில் வாட்ஸ்அப்பில் குழந்தைகளுடன் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதில், தனது உறவினர்கள் பெயரை கூறி, என்னை மன்னித்து விடுங்கள். நான் படித்த முட்டாள், நான் பைத்தியக்காரத்தனமாக ஒரு முடிவு எடுக்கிறேன் என்று முதலில் கூறியுள்ளார். இதையடுத்து 2 குழந்தைகளும், நாங்கள் தந்தையுடன் சாமிகிட்ட போறோம் என்று கூறி அனைவருக்கும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டின் வளாகத்தில் உள்ள மின்விசிறியில் ஒரே கயிற்றில் முதலில் குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்டு, ராஜாவும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது வாய்ஸ்மெசேஜை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, 3 பேரும் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளனர். தகவலறிந்து பண்ருட்டி போலீசார் வந்து 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜா காடவராயன் கோப்பெரும் சிங்கம் கடைசி வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.