சென்னை: விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 நாட்களாக எவ்வித முன்னறிவிப்பின்றியும் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல்லை சேமித்து வைக்க போதிய இட வசதியில்லாத காரணத்தினாலும், அரசிடம் இருந்து நிதி கிடைப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தாலும் நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. நெல் கொள்முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அரும்பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மழையில் நனைந்து நெற்பயிர்கள் வீணாவதைத் தடுக்கும் வகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை உடனடியாக சீர்செய்து, விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்களை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.