Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மா விவசாயிகளைக் காக்க நடவடிக்கை!

விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு விளைச்சலை எடுத்தாலும் அதை சந்தைப்படுத்த முடியவில்லை என்றால் அத்தனையும் வீண்தான். அதற்கு சமீபத்திய உதாரணம் மாம்பழத்திற்கு உரிய விலை கிடைக்காத விவகாரம். இந்தாண்டு மாமரங்களில் நல்ல விளைச்சல் இருந்தும் அதற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில் மா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி, ஒன்றிய வேளாண்மை உழவர் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ` விவசாயிகளின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.46 லட்சம் எக்டரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. அதில் 9.49 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழங்கள் உற்பத்தி ஆகிறது. பழப்பயிர் சாகுபடியில் தமிழ்நாடு மா உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு மா மகசூல் அதிகரித்துள்ளதாலும், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்களின் கொள்முதல் குறைவால், மாம்பழ விலை கிலோவுக்கு ரூ.5க்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்கின்றனர். பலர் மரத்திலேயே பழுக்க விட்டுவிடுகின்றனர். மேலும், மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் தனியாரால் நடத்தப்படுவதாலும், தென் மாநிலங்களில் மாம்பழக்கூழ் அதிக அளவில் கிடைப்பதாலும், விவசாயிகள் நியாயமான விலையைப் பெற முடியவில்லை. அதனால் தமிழ்நாட்டிலிருந்து மாம்பழங்களை வழக்கமாக கொள்முதல் செய்யும் கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த வணிகர்களும் மாம்பழங்களை கொள்முதல் செய்வதைத் தவிர்த்துள்ளனர்.

மாங்கனி விலையில் சந்தை ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் மா விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த துயரத்தைப் போக்கிட அவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவது இத்தருணத்தில் மிகவும் அவசியம் என்பதால், இதில் ஒன்றிய அரசு தலையிட்டு, ஒன்றிய அரசின் சந்தைத் தலையீட்டுத் திட்டத்தில் தற்போது உள்ள மாங்கனி விற்பனை விலைக்கும் சந்தைத் தலையீட்டு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை நேரடியாக விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். மா விவசாயிகள் குறைந்தபட்ச சாகுபடி செலவைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், நியாயமான விலையில் கொள்முதல் நடவடிக்கைகளைத் தொடங்க ஒன்றிய கொள்முதல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.