Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேன்கனிக்கோட்டை அருகே:யானை தாக்கி விவசாயி பலி:டோலி கட்டி உடலை தூக்கி வந்தனர்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்ைட அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி பலியானார். ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் டோலி கட்டி சடலத்தை சுமார் 1 கிமீ தூரம் தூக்கி வந்து வாகனத்தில் கொண்டு சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை குந்துக்கோட்டை அருகேயுள்ள குடிசல்பைல் கிராமத்தை சேர்ந்தவர் ஹேமன்னா (65). இவர் பழங்குடியின வனக்குழு தலைவராக இருந்தார். விவசாயத்துடன் மாடுகளையும் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற ஒரு மாடு வீடு திரும்பவில்லை. அதனால் மாலையில் ஹேமன்னா மாட்டை தேடி வனப்பகுதிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மாடு வீட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இரவு முழுவதும் ஹேமன்னா வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நேற்று காலை ஹேமன்னா குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனப்பகுதிக்குள் சென்று அவரை தேடினர். அப்போது பனைகாப்புக்காடு மேட்டுக்கல் தடம் என்ற இடத்தில் ஹேமன்னா காட்டு யானை தாக்கி உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அஞ்செட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அஞ்செட்டி வனச்சரகர் கோவிந்தன் தலைமையில் வனவர் ராஜமாணிக்கம் வனக்காப்பாளர் சிவக்குமார் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் எஸ்ஐ நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாது என்பதால் அவரது சடலத்தை பொதுமக்கள் டோலி கட்டி ஒரு கிமீ தூரம் தூக்கி வந்தனர். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஹேமன்னாவுக்கு நஞ்சம்மாள் என்ற மனைவியும் பசவராஜ் என்ற மகனும் வசந்தா என்ற மகளும் உள்ளனர்.