திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே நாட்டாகுடியை சேர்ந்த விவசாயி சோணைமுத்து (63). நூறுநாள் வேலை பார்ப்பதற்காக அங்கு தனியாக இருந்து வந்தார். நேற்று வீட்டு வாசலில் இவரும், உறவினர் கணேசனும் (64) பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது டூவீலரில் வந்த மூன்று பேர் சோணைமுத்துவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சரிந்து விழுந்தார்.
அப்போதும் ஆத்திரம் தீராத கும்பல், அவரது தலையை துண்டாக வெட்டி எடுத்துச் சென்று விட்டது. தடுக்க முயன்ற கணேசனையும் வெட்டியதில் அவரும் காயம் அடைந்தார். தகவலறிந்து கொலை நடந்த இடத்திற்கு எஸ்பி சிவப்பிரசாத் நேரில் வந்து ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பியாக சிவப்பிரசாத் நேற்று பகல் 12 மணிக்கு பொறுப்பேற்ற நிலையில், அடுத்த சில மணிநேரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதனிடையே சோணைமுத்துவின் தலையுடன் கொலையாளிகள் சிவகங்கை டி.புதூர் கண்மாய் பகுதியில் இருந்ததாக, சிவகங்கை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பல மணிநேர தேடுதலுக்கு பிறகு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள டி.புதூர் கண்மாயில் சோணைமுத்துவின் தலையை போலீசார் கண்டுபிடித்தனர்.