விவசாயிகளை தொழில்முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவோம்: வேளாண் வணிகத் திருவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக அவர்களை உருவாக்குவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025’ல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக செயல்பாடுகள் குறித்த கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, வேளாண்மை துறை என்று இருந்த பெயரை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை என்று மாற்றி, நம்முடைய அரசின் நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் அறிவித்தோம். அப்படித்தான், அரசின் ஒவ்வொரு திட்டங்கள் மூலமாகவும், வேளாண்மையும் அதிகரிக்க வேண்டும்; உழவர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்படவேண்டும் என்று பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறோம். உழவர்களின் கருத்துகளை, விருப்பத்தை கேட்டு, செயல்படும் அரசாக இருந்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, அதன் அடிப்படையில் திட்டங்களை, வேளாண் நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்தோம். அதன் பலனாக இப்போது வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, மேட்டூர் அணையை குறித்த நாளில் திறந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு, 5.66 லட்சம் எக்டரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 494 ஏக்கர் கூடுதல் நெல் சாகுபடி.
கடந்த 4 ஆண்டுகளில், 456.44 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டியிருக்கிறோம். இன்னும் பெருமையோடு சொல்கிறேன், 3 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு எக்டருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானிய உற்பத்தி, இப்போது, 2,857 கிலோவாக அதிகரித்திருக்கிறது. இந்த 4 ஆண்டு கால சாதனைகளை எல்லாம் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பயிர் உற்பத்தி திறனில் இந்திய அளவில் நாம் தான் முதலிடம். மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பில் 2ம் இடம். குறு தானியங்கள் மற்றும் நிலக்கடலையில் 3ம் இடம். இதிலும், நாம் முதலிடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
இதற்காக தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு கிராமமும் மென்மேலும் வளர்ச்சி அடையவேண்டும் என்று ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை உருவாக்கினோம். இதனால், கடந்த 4 ஆண்டுகளில், 10,187 கிராம ஊராட்சிகளில், 52 லட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நான் பெருமையோடு சொல்கிறேன், 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்திருக்கிறோம். அடுத்து, மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில், இதுவரைக்கும் 20 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். விவசாயிகளின் பொருளீட்டு கடனை 3 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில், இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணமாக 21 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,630 கோடி வழங்கியுள்ளோம். பயிர் காப்பீட்டு திட்டத்தில், 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,720 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு வழங்கப்பட்ட மாநில அரசின் ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் வாங்கிடவும், இயந்திர வாடகை மையங்களை நிறுவுவதற்கும் 70 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.577 கோடி மானியம்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநிலப் பகுதிகளிலும், கல்லணை கால்வாய் பாசன பகுதிகளிலும், இதுவரை 29 கோடியே 48 லட்சம் ரூபாய் செலவில், 8,370 கிலோ மீட்டர் நீளத்துக்கு சி மற்றும் டி பிரிவு கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு, கடைமடைக்கும் பாசன நீர் செல்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளை தொழில் முனைவோர்களாக மாற்றி புதிய ஏற்றுமதியாளர்களாக அவர்களை உருவாக்குவோம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி.
இதை உழவர் பெருமக்கள் எல்லோரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழவு தொழிலுக்கும், வேளாண் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், கோவி.செழியன், எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, தமிழரசி, வரலட்சுமி, கார்த்திகேயன், மோகன், துரை சந்திரசேகரன், செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஆணையர் ஆபிரகாம், இயக்குநர்கள் முருகேஷ், குமாரவேல் பாண்டியன், அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* வேளாண் கண்காட்சி இன்றும் நடைபெறும்
நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் கண்காட்சி இன்றும் நடைபெறுகிறது. கண்காட்சியில், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் விற்பனை செய்து உழவர்கள் வளம் பெறவேண்டும் என்ற உயர் சிந்தனையுடன் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, சர்க்கரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், பட்டு வளர்ச்சி துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், ஒன்றிய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் போன்ற அரசு துறைகள் மற்றும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.