Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிறு, குறு விவசாயிகளுக்கு வழிகாட்டும் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்!

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை விவசாயிகளின் நடைமுறை தேவைகள் மற்றும் அவர்கள் சந்தித்து வரும் சவால்களின் அடிப்படையில் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் சார்பில்“புதிய விரிவாக்க முயற்சிகள்” திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி விவசாயிகளுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்றுத் தருவதுடன், குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி அதிகளவு மகசூல் பெறவும், தற்போதைய பருவ மாற்றுப்பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகள் காணும் வகையிலும் தோட்டக்கலை விவசாயிகளின் உற்பத்தி பெருக்கத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

புதிய ஊடுபயிர் அறிமுகம்

தற்போது குமரி மாவட்டத்தில் அதிகளவில் பயிரிடப்படும் ரப்பர், தென்னை மற்றும் பாக்கு மரங்களில் கோகோ சாகுபடியை மீண்டும் அறிமுகம் செய்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை விவசாயிகள் மிகவும் குறைந்த முதலீட்டிலும் குறுகிய காலத்திலும் (மூன்று ஆண்டுகளில்) வேளாண் சந்தைகளில் அதிக விற்பனை வாய்ப்புள்ள கோகோ கன்றுகள் கடந்த நிதி ஆண்டில் (2024-2025) சுமார் 68,500 இலவசமாக வழங்கப்பட்டு, தற்போது பழங்குடியின விவசாயிகளின் தோட்டங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய விரிவாக்க முயற்சியில் பல சுயஉதவிக்குழுக்கள், தொண்டு நிறுவனங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் வங்கிகளும் இணைக்கப்பட்டு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கிராமப்புற பெண்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள்

கடந்த சில ஆண்டுகளாக ரப்பர் சாகுபடியில் பால் வெட்டும் தொழிலாளர்களின் பிரச்னை மிகப்பெரிய சவாலாக உள்ளது. குறைந்த அளவிலான தொழிலாளர்கள், அதிகப்படியான கூலி, பருவ மாற்று பிரச்னைகள் காரணமாக ரப்பரில் உற்பத்தித்திறன் குறைவது, விஞ்ஞான ரீதியாக ரப்பர் அறுவடை செய்யாத காரணத்தால் ரப்பர் மரங்களின் கால அளவு மற்றும் திறன் குறைவது போன்றவை நடைமுறை பிரச்னைகளாக உள்ளது. இத்தகைய சூழலில் கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்யவும், அவர்கள் தொடர்ச்சியாக வருமானம் பெறும் நோக்கில் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், கன்னியாகுமரி ரப்பர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் ரப்பர் வாரியத்துடன் இணைந்து அவர்களுக்கு ஒருவார கால பயிற்சியும் வழங்கி, ரப்பர் பால் எடுப்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கி அவர்களை திறன் வாய்ந்த தொழிலாளர்களாக மாற்றி உள்ளது. மேலும் ரப்பர் கொண்டு சிறு மற்றும் குறு தொழில்கள் செய்யும் வண்ணம் புதிய சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி செயல்படவும் துணைபுரிந்து வருகிறது.

விளைபொருட்களை விற்பனை செய்ய பயிற்சிகள்

தற்போது தோட்டக்கலை சார்ந்த விளைபொருட்கள் விற்பனையில் இடைத்தரகர்களின் தலையீடு மற்றும் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கூட தங்களது விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. மாறாக அவர்கள் பெறும் விற்பனை விலை அவர்களின் உற்பத்தி விலைக்கு கூட போதவில்லை. இத்தகைய நடைமுறை சூழலுக்கு மாற்றாக வேளாண் சந்தைகளில் உள்ள இடைத்தரகர்களை தவிர்த்து நேரடியாக நுகர்வோரிடம் விளைபொருட்களை விற்பனை செய்யும் நோக்கிலும், அவர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க செய்யவும் சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிரை இணைத்து அவர்களின் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய குலசேகரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி தேசிய வேளாண் சந்தையுடன் இணைந்து செயல்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் விளைபொருட்களை சேமிப்புஅறைகளில் இருப்பு வைத்து விற்பனை செய்யவும், அவர்களின் விளைபொருட்களுக்கு சந்தைவிலைக்கு ஏற்ப கடன்பெறவும், நல்ல விலை கிடைக்கும் பட்சத்தில் நமது தேசம் முழுவதும் விற்பனை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வேளாண் செயலிகள்

தற்போது ஒன்றிய மற்றும் மாநில வேளாண் துறைகள், பல வளர்ச்சி நிறுவனங்கள் பல்வேறு செயலிகள் வாயிலாக தங்களின் சேவைகளை வழங்கி வருகின்றன. இந்த புதிய செயலிகள் பற்றி விளக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்துவது குறித்த பயிற்சிகளும் சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை பெறவும், அவற்றின் இருப்புபற்றிய விவரங்களை பெறவும், வானிலை தகவல்களை பெறவும் இந்த செயலிகள் உதவிகரமாக உள்ளன. தற்போது தமிழ்நாடு இயற்கைப்பேரிடர் மேலாண்மை மையத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள “TN-Alert” செயலி வாயிலாக விவசாயிகள் துரிதமாக வானிலை தகவல்களை பெற்று செயல்படவும், இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை பெறும் வகையில் விழிப்புணர்வு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து வேலை இல்லாத18 முதல் 35 வயதிற்குள் உள்ள பள்ளிப்படிப்பு, பட்டய படிப்புகள், இளநிலைமற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் பயின்றவர்கள் சுய வேலைவாய்ப்பு பெறவும், பல தனியார் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறும் நோக்கில் கடந்த சில வாரங்களாக காளான் வளர்ப்பு பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

தொடர்புக்கு:

முனைவர் தி.ராஜ்பிரவீன்

(இணை பேராசிரியர்)

94863 85423.

மார்த்தாண்டம் திட்டம்

குமரி மாவட்ட மக்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்த விரிவாக்க திட்டமான மார்த்தாண்டம் திட்டம், உலகம் முழுவதும் உள்ள விரிவாக்கப் பணிகளுக்கு முன் உதாரணமாக திகழ்ந்த சிறப்பான திட்டம். அமெரிக்க வேளாண் வல்லுநர் முனைவர் ஸ்பென்சர் ஹட்ச் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த வளர்ச்சித் திட்டத்தில் குமரி மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கிராமங்கள் இணைக்கப்பட்டு பல புதிய வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்ந்த தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மார்த்தாண்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட இந்த விரிவாக்க முயற்சிகளின் பயனாக பல செயல்முறை விளக்கப் பண்ணைகள் பல கிராமங்களில் விவசாயிகளின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு பல புதிய வேளாண், தோட்டக்கலை மற்றும் கால்நடை தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சுய உதவியுடன் கூடிய வல்லுனர் ஆலோசனை என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அவற்றில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.