Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயி கொலை வழக்கில் 3 ரவுடிகள் அதிரடி கைது: கள்ளக்காதலியை அபகரிக்க முயன்றதால் தீர்த்து கட்டியது அம்பலம்

சேலம்: சேலத்தில் விவசாயி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ரவுடியின் கள்ளக்காதலியுடன் தொடர்பு வைக்க தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததால் தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் சூரமங்கலம் போடிநாயக்கன்பட்டி மிட்டாக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (65), விவசாயி. இவரது மனைவி பெருமாயி (60). இவர்களுக்கு விஷ்ணு மகேந்திரன் (42), மணிவண்ணன்(33) ஆகிய மகன்களும், உமா (40), வெண்ணிலா (35) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். பெண்களுக்கு திருமணமாகி விட்டது. மகன்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம் 18ம்தேதி வீட்டில் படுத்திருந்த போது மின்விசிறி கழன்று செல்லப்பன் தலையில் விழுந்தது. இதில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவருக்கு தையல் போடப்பட்டது. பின்னர் தையல் பிரிக்கப்பட்டு குணமானது. செல்லப்பன் மாட்டுகொட்டகையில் கட்டில் போட்டு படுப்பது வழக்கம். இதேபோல் கடந்த 7ம் தேதி இரவு அங்கு படுத்திருந்த அவர் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில் மரக்கட்டை அல்லது இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. என்றாலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விவசாயியின் மனைவி மற்றும் மகன்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீர் திருப்பமாக செல்லப்பனை கொன்ற கொலையாளிகள் 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில் 3 ரவுடிகள் சிக்கியது எப்படி என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. விவசாயி செல்லப்பன், பால் விற்பனை செய்து வந்தார். இதுதொடர்பாக ஏதாவது சம்பவம் நடந்திருக்குமா? என மனைவி பெருமாயிடம் தொடர் விசாரணை நடத்தினர். வீட்டுக்காரர் யாரிடம் எல்லாம் பேசுவார்? என விசாரித்தபோது, அருகில் உள்ள சங்கீதா (30) என்ற பெண்ணிடம் பேசுவார் என்ற சிறிய தகவலை சொன்னார். இதையடுத்து போலீசார் சங்கீதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் விவசாயி செல்லப்பன் தன்னிடம் டார்ச்சர் செய்து வந்த தகவலை போலீசாரிடம் தெரிவித்தார். எனது வீட்டிற்கு, உறவினரான ரவுடி பிரபு(32) என்பவர் அடிக்கடி வந்து செல்வார். இதனை தெரிந்து கொண்ட செல்லப்பன், பிரபுவிடம் மட்டும்தான் இருப்பாயா? என்னிடம் பேச மாட்டாயா எனக் கேட்டு தினந்தோறும் தொந்தரவு செய்து வந்தார். இதுகுறித்து பிரபுவிடம் தெரிவித்தாக சங்கீதா கூறினார்.

இதையடுத்து கந்தம்பட்டி திரவுபதியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த ரவுடி பிரபு(32) அவரது கூட்டாளிகளான ரவுடி குமரவேல்(எ)பரோட்டா குமார்(22), தினேஷ்(எ)வாலு(20) ஆகியோரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் ரவுடி பிரபு கூட்டாளிகளுடன் சேர்ந்து விவசாயி செல்லப்பனை தீர்த்து கட்டியது தெரியவந்தது.  ரவுடி பிரபுவுக்கும், சங்கீதாவுக்கும் 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வருகிறது. இதனை தெரிந்து கொண்ட செல்லப்பன் தன்னுடனும் உல்லாசமாக இருக்குமாறு தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தார்.

இதுகுறித்து சங்கீதா, பிரபுவிடம் ெதரிவித்தார். இதனால் கடும்கோபம் அடைந்த ரவுடி பிரபு, தனது கள்ளக்காதலியை அபகரிக்க முயன்ற செல்லப்பனை தீர்த்துகட்ட முடிவு செய்தார். இதையடுத்து நண்பரான ரவுடி குமரவேல்(எ)பரோட்டா குமார், தினேஷ்(எ)வாலு ஆகியோருடன் சம்பவத்தன்று நள்ளிரவு செல்லப்பனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு கட்டிலில் படுத்திருந்த செல்லப்பனின் தலையில் அங்கு கிடந்த கட்டையை எடுத்து பயங்கரமாக தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இளம்பெண் சங்கீதாவுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.